

இந்தியாவும் பாகிஸ்தானும் 2003-ம் ஆண்டு போர் நிறுத்த ஒப்பந்த விதிகளை பின்பற்ற ஒப்புக் கொண்டுள்ளதாக இந்திய ராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.
கட்டுப்பாட்டு எல்லைக்கோடுப் பகுதியில் அமைதி நிலவவும், இரு நாடுகளின் எல்லையோரங்களில் வசிக்கும் மக்கள் நலனுக்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, ஜெனரல் ஆபிசர் கமாண்டிங் 16 கார்ப்ஸ் லெப்டினன்ட் ஜெனரல் ஆர்.ஆர். நிம்போர்கர் ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஜம்மு காஷ்மீரில் உள்ள கட்டுப் பாட்டு எல்லைக்கோடு பகுதியில் அமைதி நிலவ பல்வேறு நடை முறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இரு நாடுகளும் ஏராளமானவற்றை நடைமுறைப்படுத்த ஒப்புக் கொண்டுள்ளன. எல்லையில் அமைதி நிலவ இரு நாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பின்பற்ற வேண்டும்.
எல்லையோர மக்களின் பாதுகாப்பு குறித்து இருநாடுகளும் கவலை கொள்கின்றன. திங்கள்கிழமை நடைபெற்ற கொடியமர்வு கூட்டத்தில் இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் கவலை தெரிவித்தனர். இதன் காரணமாகவே இரு நாடுகளும் பேச்சுவார்த்தைக்கு முன்வந்தன.
கொடியமர்வு கூட்டத்தின் முக்கிய நோக்கமே, போர் நிறுத்த ஒப்பந்த மீறல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காகத்தான். கடுமை யான எச்சரிக்கை விடுப்பதற்காக நாம் கொடியமர்வு கூட்டத்துக்குச் செல்லவில்லை. நல்லிணக்க அடிப்படையில்தான் சென்றோம்.
எல்லையில் அமைதி நிலவ வேண்டும். இரு நாடுகளின் மக்களும் பாதிக்கப்படக்கூடாது. ஆயுத சண்டைகளால் நமது தரப்பிலும் எதிர் தரப்பிலும் இழப்புகள் உள்ளன. எனவே, எல்லையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்படக்கூடாது.
பாகிஸ்தானையும் நாம் நம்ப வேண்டும். அவர்கள் அதனைப் பின்பற்றாமல் போவதற்குக் காரணம் ஏதுமில்லை. இரு தரப்பிலும் பகைமை உணர்வு இல்லை, பிரச்சினைகள் குறித்துப் பேசினோம். இணக்கமான பேச்சுவார்த்தையே நடந்தது. இது பயனளிக்கும் என்றே நம்புகிறேன்.
எல்லைக்கு அப்பாலிருந்து சில தீவிரவாதிகள் ஊடுருவத் தயாராக இருந்தனர். அவர்கள் கொல்லப்பட்டனர். எனவே, தீவிரவாதிகள் ஊடுருவ தயாராக இருப்பதற்கு இது சாட்சி. எனினும் எவ்வளவு தீவிரவாதிகள், முகாம் கள் எல்லைக்கு அப்பால் செயல் படுகின்றன என்பதை துல்லியமாகச் சொல்ல முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.