

திருப்பதி கோயில் பிரம்மோற்சவத்தின் 8-ம் நாளான நேற்று காலை தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று, தேரை வடம் பிடித்து இழுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய விழாவாக நேற்று காலை தேரோட்டம் நடைபெற்றது. இதில் உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிகள் அலங்கரிக்கப்பட்ட தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
தேரோட்டத்தை காண நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருமலையில் திரண்டனர். கோயில் முகப்பு கோபுரம் அருகில் இருந்து 4 மாட வீதிகளில் உற்சவ மூர்த்திகள் தேரில் பவனி வந்தனர். தேரை பக்தர்கள் பய பக்தியுடன் வடம் பிடித்து இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மாட வீதிகளில் திரண்டிருந்த பக்தர்கள் ‘கோவிந்தா கோவிந்தா’ என முழக்கமிட்டு சுவாமியை வழிப்பட்டனர். தேரின் மீது மிளகு, உப்பு ஆகியவற்றை தூவி சிலர் நேர்த்திக்கடன் செலுத்தினர். தேரின் முன் காளை, குதிரை, யானை பரிவட்டங்கள் சென்றன. வேத பண்டிதர்கள், ஜீயர் குழுவினரும் பங்கேற்றனர். பல்வேறு மாநில நடனக் கலைஞர்களின் நடன நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
இரவு குதிரை வாகனத்தில் உற்சவரான மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
விழாவின் 9-ம் நாளான இன்று காலை சக்கர ஸ்நானம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. கோயில் அருகே உள்ள தீர்த்தவாரி எனப்படும் கோயில் குளத்தில் உற்சவ மூர்த்திகளுக்கு திருமஞ்சன நிகழ்ச்சி நடைபெறும். இதையடுத்து சக்கர ஸ்நானம் நிகழ்ச்சி நடைபெறும். இதைத் தொடர்ந்து பிரம்மோற்சவ கொடி இறக்கப்படும். இத்துடன் பிரம்மோற்சவமும் நிறவடைகிறது.
அடுத்த மாதம் அக்டோபர் 14-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது.