இந்திய தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் சான்றளிக்கப்பட்ட தலைக்கவசம் அறிமுகம்: நெடுஞ்சாலை அமைச்சகம் கருத்துக்கேட்பு

இந்திய தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் சான்றளிக்கப்பட்ட தலைக்கவசம் அறிமுகம்: நெடுஞ்சாலை அமைச்சகம் கருத்துக்கேட்பு
Updated on
1 min read

சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் இருசக்கர வாகன தலைக் கவசங்களுக்கு BIS (இந்திய தரக்கட்டுப்பாட்டு நிறுவனம்) சான்றிதழை அமல்படுத்துவது குறித்த பொதுப் பரிந்துரைகளைக் கேட்டுள்ளது.

இந்தியச் சாலைகளில் இருசக்கர வாகன ஓட்டிகள் பயன்படுத்தும் தலைக்கவசங்கள் தரமற்றவையாக உள்ளன. ஐஎஸ்ஐ சான்றிதழ் பெற்ற தலைக்கவசங்கள் அங்கீகரிக்கப்படுகின்றன. அங்கீகாரம் இல்லாத தரமற்ற தலைக்கவசங்கங்களால் வாகன ஓட்டிகள் காயமடைவது, உயிரிழப்பது நடக்கிறது.

இதைத் தடுக்க தலைக்கவசத்தில் தனது கவனத்தைத் திருப்பியுள்ளது மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம். இந்திய தரக் கட்டுப்பாட்டுச் சான்றிதழ் பெற்ற தலைக்கவசங்களை மட்டுமே செப்.4 முதல் அமலுக்குக் கொண்டுவர உத்தேசித்துள்ளது. இதுகுறித்து கருத்தை அனுப்ப 30 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

“இருசக்கர வாகன ஓட்டிகளின் பாதுகாப்புக்காக தலைக்கவசங்களை (ஹெல்மெட்) இந்தியத் தர நிர்ணயச் சட்டம் 2016 இன் படி, கட்டாயச் சான்றின் கீழ் கொண்டு வருவதற்கான வரைவு அறிவிப்பை சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைதுறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் இருசக்கர வாகனங்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்ய BIS (இந்திய தரக் கட்டுப்பாட்டு நிறுவனம்) சான்றளிக்கப்பட்ட தலைக்கவசம் (ஹெல்மெட்) மட்டுமே வைத்திருக்க இது உதவும்.

இது இருசக்கர வாகன தலைக்கவசங்களின் (ஹெல்மெட்டுகளின்) தரத்தை மேம்படுத்துவதோடு, சாலைப் பாதுகாப்பு சூழ்நிலையையும் மேம்படுத்தும். மேலும், இருசக்கர வாகனங்கள் சம்பந்தப்பட்ட ஆபத்தான காயங்களைக் குறைக்க இது மேலும் உதவியாக இருக்கும்.

இது தொடர்பான பரிந்துரைகள் அல்லது கருத்துகளை இணைச் செயலாளர் (MVL), சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைதுறை அமைச்சகம், போக்குவரத்து பவன், நாடாளுமன்ற வீதி, புதுடெல்லி -110001 (மின்னஞ்சல்: jspb-morth@gov.in) என்ற முகவரிக்கு முப்பது நாட்களுக்குள் அனுப்பலாம்”.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in