

பாஜக-வை விமர்சிப்பதை, எதிர்ப்பதை விடுத்து விவரம் புரியாத காங்கிரஸார் சிலர் பாஜக தலைமை தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியை எதிர்ப்பதற்கு பதிலாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியை எதிர்க்கின்றனர் என்று மணீஷ் திவாரி ஆதங்கப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர்கள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஆட்சியில் நிகழ்ந்த நிர்வாகக் குளறுபடிகளே காங்கிரஸ் சரிவுக்குக் காரணம் என்று சோனியா காந்தியிடமே தெரிவித்ததாகச் செய்திகள் எழுந்தன.
இந்நிலையில் மணீஷ் திவாரி, தன் ட்விட்டர் பக்கத்தில்,
“2004 முதல் 2014 வரை பாஜக ஆட்சியில் இல்லை. ஆனால் அந்தக் காலக்கட்டத்திலும் கூட அவர்கள் வாஜ்பாயியை குறைகூறி பேசியதில்லை. ஆனால் காங்கிரஸ் கட்சியிலோ, விவரம் புரியாத சிலர் துரதிர்ஷ்டவசமாக டாக்டர் மன்மோகன் சிங் தலைமை ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை விமர்சனம் செய்கின்றனர். பாஜக, தேஜகூவை எதிர்ப்பதற்கு பதிலாக சொந்தக் கட்சியின் ஆட்சியை விமர்சிக்கின்றனர்.
எப்போது ஒற்றுமை தேவைப்படுகிறதோ அந்த நேரத்தில் கட்சியை உடைக்கின்றனர்” என்று வேதனையாகப் பதிவிட்டுள்ளார்.