

ஜம்மு காஷ்மீரின் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெகபூபா முப்திக்கான வீட்டுக் காவல் மேலும் 3 மாதங்கள் பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நீட்டிக்கப்பட்டிருப்பது சட்டத்தை தவறாகப் பயன்படுத்துவதாகும், அரசியலமைப்பு உரிமைகளை மறுப்பதாகும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீருக்குச் சிறப்பு அதிகாரம் வழங்கும் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டு, மாநிலம் ஜம்மு காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்து மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி அறிவித்தது.
இந்த அறிவிப்பைச் செய்வதற்கு முதல் நாள் இரவில் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி, தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா, அவரின் மகனும் முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதில் முன்னாள் முதல்வர்கள் மூவர் மீதும் பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.
இதற்கிடையே உமர் அப்துல்லா, பரூக் அப்துல்லா ஆகியோர் கடந்த மார்ச் மாதம் விடுவிக்கப்பட்டனர். ஆனால், வரும் 5-ம் தேதியுடன் மெகபூபா முப்தியின் பாதுகாப்புக் காலம் முடிவடைய இருந்த நிலையில், மேலும் 3 மாத காலம் வீட்டுக் காவலை பொதுப்பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நீட்டித்து ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் அறிவித்தது.
இந்நிலையில், மெகபூபா முப்திக்கு மேலும் 3 மாதம் வீட்டுக் காவல் நீட்டிக்கப்பட்டதை காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் கண்டித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் கூறியிருப்பதாவது:
''பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மெகபூபா முப்திக்கு வீட்டுக் காவலை மேலும் 3 மாதங்கள் நீட்டிக்கப்பட்டு, சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அரசியலமைப்புச் சட்டம் ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்கிய உரிமைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
61 வயது முன்னாள் முதல்வர், 24 மணிநேரமும் அதிகாரிகள் பாதுகாப்பின் கீழ் இருப்பவர், எந்த அடிப்படையில் பொதுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிப்பார்?
நிபந்தனை அடிப்படையில் விடுவிக்கிறேன் என்று கூறும்போது, எந்த ஒரு சுயமரியாதை உள்ள தலைவரும், அதை நிராகரிக்க உரிமை உண்டு. அதனால் அவர் நிராகரித்தார். வீட்டுக் காவலில் மெகபூபாவை வைத்தமைக்கு அவரின் கட்சியின் கொடியின் நிறத்தைக் காரணமாகக் கூறுவது நகைப்புரியது.
அரசியலமைப்புச் சட்டத்தில் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டது குறித்து மெகபூபா முப்தி ஏன் பேசக்கூடாது? அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளில் ஒன்றான பேச்சு சுதந்திரத்தில் ஒருபகுதியில்லையா?
அரசியலமைப்புச் சட்டத்தில் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் நானும் வாதிடுகிறேன். 370-வது பிரிவுக்கு எதிராக நான் பேசினால், நான் பொதுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிப்பேனா?
நாம் அனைவரும் ஒட்டுமொத்தமாக இணைந்து குரல் கொடுத்து, மெகபூபா முப்தியை உடனடியாக விடுக்க வலியுறுத்துவோம்''.
இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.