

ஆபாச இணையதளங்களுக்கு முழுமையாக தடை விதிக்க கோரி, உச்ச நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் சங்கம் மனு தாக்கல் செய்துள்ளது. இம்மனு அடுத்த மாதம் விசாரணைக்கு வரவுள்ளது.
ஆபாச இணைய தளங்களுக்கு தடை விதிக்க கோரி, கமலேஷ் வாஸ்வாணி என்பவர் தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது. இந்த வழக்கின் ஒருபகுதியாக, கடந்த ஜூலை 31-ம் தேதி மத்திய ஒளிபரப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் 857 ஆபாச இணைய தளங்களுக்கு தடை விதித்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, இத்தடை விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்நிலையில், உச்ச நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் அதன் செயலாளர் பிரேரனா குமாரி உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
நாட்டில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதற்கு காரணமாக இருப்பது ஆபாச இணையதளங்களே. இதில் தாராளமாக கிடைக்கும் ஆபாச படங்கள், வீடியோ மற்றும் ஆபாச கருத்துகளை பார்த்து, படித்துவிட்டு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களில் இளைஞர்கள் ஈடுபடுகின்றனர். இத்தகைய இணையதளங்களைத் தடுக்க தற்போதுள்ள சட்டம் போதுமானதாக இல்லை. எனவே, ஆபாச இணையதளங்களை முழுவதும் தடை செய்யும் வகையில், தேசிய அளவில் கொள்கை வகுக்க வேண்டும்.
பேருந்துகளில் ‘ஜாமர்’ கருவி
ஆபாச இணையதளங்கள் மட்டுமின்றி ஆபாச வீடியோ பதிவுகளை பரிமாறும் செயலுக்கும் தடை விதிக்கும் வகையில், வழிமுறைகளை வகுக்க வேண்டும். குழந்தைகளுக்கு எதிரான ஆபாச இணையதளங்களையும் முற்றிலுமாக முடக்க வேண்டும். குழந்தைகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகளில் ஓட்டுநர் மற்றும் உதவியாளர்கள் யாரும் மொபைல் போனை பயன்படுத்த முடியாத அளவில் பேருந்துகளில் ‘மொபைல் ஜாமர்’ பொருத்த பள்ளிகளுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இம்மனு ஏற்கெனவே விசாரணையில் உள்ள வழக்குடன் இணைக்கப்பட்டு அடுத்த மாம் 13-ம் தேதி தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான அமர்வு முன்பாக விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது