Published : 01 Aug 2020 09:11 AM
Last Updated : 01 Aug 2020 09:11 AM

ஐமுகூ அரசின் நிர்வாகக் குறைபாடுகளே காங்கிரஸ் சரிவுக்கு காரணம்: சோனியா முன்னிலையில் இளம் தலைவர்கள் புகார்

‘‘காங்கிரஸ் சந்தித்து வரும் தொடர் சரிவுகளுக்கு, முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் நிர்வாகக் குறைபாடுகளே காரணம்’’ என்று அக்கட்சியின் இளம் தலைவர்கள் பகிரங்கமாக குற்றம் சாட்டினர்.

நாட்டில் நிலவி வரும் அரசியல் சூழல், கரோனா வைரஸ் பாதிப்பு, பொருளாதார மந்த நிலை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிப்பதற்காக, காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம் காணொலி காட்சி முறையில் நேற்று நடைபெற்றது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மூத்த தலைவர்கள் கபில் சிபல், ப.சிதம்பரம், குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதேபோல, கே.சி. வேணுகோபால், ராஜீவ் சாதவ் உள்ளிட்ட இளம் தலைவர்களும் இதில் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தின் போது, காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர்களின் செயல்பாடுகள் குறித்து கபில் சிபல் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் அதிருப்தி தெரிவித்ததாக கூறப்படுகிறது.

குறிப்பாக, கரோனா விவகாரம், சீனாவுடனான எல்லைப் பிரச்சினை உள்ளிட்ட பல விஷயங்களில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு தோல்வி அடைந்து வருவதாகவும், ஆனால் அவற்றை மக்களிடம் கொண்டு செல்வதில் தற்போதைய நிர்வாகிகள் கவனம் செலுத்தவில்லை எனவும் மூத்த தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், காங்கிரஸ் கட்சி தன்னை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

இந்தக் கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ராஜீவ் சாதவ் உள்ளிட்ட இளம் நிர்வாகிகள், “முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது நடந்த நிர்வாகத் தவறுகளே தற்போதைய காங்கிரஸின் சரிவுக்கு காரணம்” எனத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். அப்போதைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் அமைச்சரவையில் இடம்பெற்றவர்கள், கட்சித் தொண்டர்களை ஒருபோதும் சந்திக்கவில்லை என்றும், கள யதார்த்தத்தில் இருந்து விலகியே இருந்ததாகவும் இளம் நிர்வாகிகள் குற்றம் சாட்டினர்.

இதனைத் தொடர்ந்து, கட்சியின் மூத்த மற்றும் இளம் தலைவர்கள் இடையே நீண்ட நேரம் காரசார விவாதம் நடைபெற்றதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, இந்தக் கூட்டத்தின் போது, ராகுல் காந்தி மீண்டும் கட்சித் தலைவராக பொறுப்பேற்க வேண்டும் என இளம் தலைவர்கள் கோரிக்கை வைத்தனர்.

சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் எந்தக் கருத்தையும் கூறவில்லை எனத் தெரிகிறது.

காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவர்கள் மற்றும் ராகுல் காந்தியின் ஆதரவாளர்களாக கருதப்படும் சில இளம் நிர்வாகிகளுக்கு இடையே அண்மைக் காலமாக கருத்து மோதல் நிலவி வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில், இந்தக் கூட்டத்தில் இவ்வாறு விவாதம் நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x