

கணக்கில் வராத தங்கம் வைத்திருப்பவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கும் திட்டத்தைக் கொண்டுவர நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதன்மூலம் வரி ஏய்ப்பையும், தங்கம் இறக்குமதியையும் குறைக்க திட்டமிட்டுள்ளது.
இந்தியர்கள் தங்கத்தின் மீது அதிக ஆர்வம் கொண்டவர்கள். இதனால், இந்தியாவில் தங்கத்துக்கான தேவை எப்போதுமே அதிகமாகவே இருக்கும். அதேசமயம் வரி ஏய்ப்பு செய்பவர்களும், வருவாய் கணக்கை மறைப்பவர்களும் தங்கத்தை வாங்கி குவிப்பதும் வழக்கம். இந்நிலையில், கணக்கில் வராத தங்கத்தை வைத்திருந்தால் அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்க மத்திய நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
அதன்படி கணக்கில் வராத தங்கம் வைத்திருப்பவர்கள் வருமான வரித் துறையிடம் தானாக முன்வந்து தகவல் தெரிவித்தால், அவர்களுக்கு பொது மன்னிப்புத் திட்டத்தின் கீழ் வரி மற்றும் அபராதத்தை மட்டும் செலுத்தி தண்டனையில் இருந்து தப்பிக்க வழிவகை செய்யப்படும்.
இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியிடம் பேச்சு நடத்திய பிறகு நிதி அமைச்சகம் இந்த பொது மன்னிப்பு திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி வருவதாகவும் இறுதி விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்கத்தில் செய்யப்படும் முதலீடு, சந்தையில் புழங்காமல் வீடுகளில் முடங்கி விடுகிறது என்பதால் 2015-லேயே பிரதமர் நரேந்திர மோடி உள்நாட்டு தங்கத்தின் தேவையைக் குறைக்கவும் தங்க இறக்குமதியைக் குறைக்கவும் சில திட்டங்களைக் கொண்டு வந்தார். அதன் ஒரு நடவடிக்கையாக, அசல் தங்கத்துக்குப் பதிலாக தங்கப் பத்திரங்கள் வெளியிடப்பட்டன. எனினும், இந்தத் திட்டங்களால் தங்கத்தின் தேவையையோ, இறக்குமதியையோ குறைக்க முடியவில்லை. எனவே, கணக்கில் வராத தங்கத்தை வெளிக்கொண்டு வர தற்போது பொதுமன்னிப்பு வழங்குவது திட்டமிடப்படுகிறது.