

டெல்லியில் ஊரடங்கு தளர்வு விவகாரத்தில் அம்மாநில முதல்வர் கேஜ்ரிவாலுக்கும் துணைநிலை ஆளுநர் அனில் பைஜாலுக்கும் இடையே மோதல் உருவாகியுள்ளது.
கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு ஸ்தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
ஜூன் மாதம் முதல் ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கெனவே அமலில் உள்ள ஊரடங்கில் தளர்வுகள் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகிறது. தற்போது 2-ம் கட்ட ஊரடங்கு தளர்வு அமலில் உள்ளது. இன்று நள்ளிரவு (ஜூலை 31-ம் தேதி) 12 மணி வரை ஊரடங்கு ஏற்கெனவே அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் 3-ம் கட்ட ஊரடங்கு தளர்வை மத்திய உள்துறை அமைச்சகம் அண்மையில் அறிவித்தது.தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த 3-ம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் மாநில அரசுகள் தேவைக்கேற்றவாறு மாற்றங்களை செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் டெல்லியில் ஓட்டல்களை திறக்கவும், வார சந்தைகளை பரிசோதனை அடிப்படையில ஒரு வாரம் திறக்கவும் அம்மாநில முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அனுமதி அளித்தார்.
ஆனால், டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தலைவரான துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் அதை நிராகரித்துள்ளார். கரோனா வைரஸின் சூழ்நிலை இன்னும் மோசமான நிலையில்தான் இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டி ஆளுநர் இந்த முடிவை எடுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையில் மேலும் மோதல் ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து துணைநிலை ஆளுநரின் உத்தரவு செயல்படுத்தப்படும் என கேஜ்ரிவால் அறிவித்துள்ளார்.