

பெங்களூருவில் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதால் பக்தர்கள் பண்டிகை தினங்களில் வழிபாட்டுத் தலங்களுக்கு செல்ல வேண்டாம் என பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக பெங்களூரு மேயர் கவுதம் குமார் வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
பெங்களூரு மாநகராட்சியில் கரோனா வைரஸ் பரவல் வேகம் அதிகமாக உள்ளது. மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மட்டும் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட், செப்டம்பர் மாதத்தில் வைரஸ் பரவல் அதிகமாக இருக்கும் சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களிலே வைரஸ் அதிகமானோருக்கு பரவுகிறது. எனவே மக்கள் மார்க்கெட், கடை வீதி, வழிபாட்டுத் தலங்கள், குடும்ப நிகழ்வுகளில் கூடுவதைத் தவிர்க்க வேண்டும். ஜூலை 31-ம் தேதி (வெள்ளிகிழமை) வரமஹாலட்சுமி பூஜை திருவிழா கொண்டாடப்படுவதால், அன்றைய தினம் பக்தர்கள் கோயில்களில் குவிவதைத் தவிர்க்க வேண்டும்.
இதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 1-ல் பக்ரீத், ரக்ஷா பந்தன், கவுரிகணேஷா பண்டிகை, மொஹரம், ஓணம் என அடுத்தடுத்த பண்டிகை தினங்கள் வருகின்றன.
இந்த நாட்களில் பக்தர்கள் வழிபாட்டுத் தலங்களுக்கு செல்ல வேண்டாம். அதனைத் தவிர்த்தால் கரோனா வைரஸ் மற்றவர்களுக்கு பரவுவதைத் தடுக்க முடியும்.
அதே போல பக்ரீத் பண்டிகையின் போது விலங்குகளை சாலை, மக்கள் நடமாடும் இடங்கள், வழிபாட்டு தலங்கள், பொது இடங்களில் பலியிடக் கூடாது. இதை மீறி பொது இடங்களில் விலங்குகளைப் பலியிடுவோர் மீது கர்நாடக முனிசிபல் மாநகராட்சி சட்டம் 1976-ன்படி நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சட்டத்தின் கீழ் ஆறு மாத சிறைத் தண்டனையும் ரூ. 1000 அபராதமும் விதிக்க முடியும்’’
இவ்வாறு கவுதம் குமார் தெரிவித்துள்ளார்.