

ஜம்மு காஷ்மீர் மாநில வனப்பகுதியில் குண்டு துளைக்கப்பட்ட ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதி ஒருவனின் உடல் நேற்று கண்டெடுக்கப்பட்டது.
இதுகுறித்து போலீஸார் நேற்று கூறியதாவது:
பாரமுல்லா மாவட்டம் தேவ்பக் தங்மார்க் வனப்பகுதியிலிருந்து ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அது ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதி பயாஸ் அகமது பட் என்பவரின் உடல் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஹிஸ்புல் அமைப்பில் கமாண்டராக இருந்த இவர், வைலோ பட்டன் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். இவரது உடலில் துப்பாக்கி குண்டு துளைக்கப்பட்டிருந்தது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஹிஸ்புல் அமைப்பிலிருந்து விலகிய அப்துல் கயூம் நஜார் என்பவரால் தொடங்கப்பட்ட லஷ்கர்-இ-இஸ்லாம் (எல்இஐ) அமைப்பினரால் அகமது பட் கொல்லப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்த எல்இஐ அமைப்பினர் கடந்த மே, ஜூன் மாதங்களில் செல்போன் கோபுரங்கள் மற்றும் தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பு வசதிகள் மீது பல தடவை தாக்குதல் நடத்தி உள்ளனர் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டு சோபோர் பகுதியில் பிரிவினைவாத இயக்கங்களைச் சேர்ந்த சிலர் கொல்லப்பட்டதற்கும் இந்த அமைப்பினரே காரணம் என கூறப்படுகிறது.
தங்கர்போரா பகுதியில் கடந்த திங்கள்கிழமை துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில் 3 தீவிரவாதிகளின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இவர்கள் எல்இஐ அமைப்பைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என கருதப்பட்டது. ஆனால், இந்த மூன்று பேரும் தங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என ஹிஸ்புல் அமைப்பின் தலைவர் சையத் சலாஹுதீன் தெரிவித்திருந்தார்.