கரோனாவுக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்குச் சரியான நேரத்தில் ஊதியம் தாருங்கள்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

உச்ச நீதிமன்றம் : கோப்புப்படம்
உச்ச நீதிமன்றம் : கோப்புப்படம்
Updated on
2 min read

கரோனாவுக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கு உரிய காலத்தில் ஊதியம் கிடைப்பதை உறுதி செய்யுங்கள். மருத்துவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்ட காலத்தை விடுப்பாகக் கருத முடியாது என்றால் அதை மாநில அரசுகளிடம் கூறி நடைமுறைப்படுத்துங்கள் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா, பஞ்சாப், கர்நாடகா, திரிபுரா ஆகிய மாநிலங்கள் கரோனா போரில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கு முறையாக ஊதியம் வழங்குவதில்லை. எங்களின் உத்தரவுகளை மாநில அரசுகள் பின்பற்றுவதில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதிட்டது.

கரோனாவுக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு மாநில அரசுகள் ஊதியத்தை முறையாக வழங்குவதில்லை, கரோனாவில் பாதிக்கப்பட்டு அவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டால் அந்தக் காலத்தை விடுப்பாக எடுத்துக்கொண்டு ஊதியத்தை மாநில அரசு பிடித்தம் செய்கிறது. ஆதலால் ஊதியத்தை முறையாக வழங்கிடக் கோரி மருத்துவர் அருண் ஜெயின் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

மேலும், கடந்த மே 14-ம் தேதி மத்திய அரசு பிறப்பித்த உத்தரவில், மருத்துவர்களுக்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தும் காலம் கட்டாயமில்லை என்று தெரிவித்திருந்தது. அந்த உத்தரவையும் மனுதாரர் கேள்விக்குள்ளாக்கியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை கடந்த மாதம் 17-ம் தேதி நடந்தபோது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “கரோனாவுக்கு எதிரான போரில் களத்தில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு எந்தவிதமான தாமதம் இன்றி ஊதியத்தை வழங்க மாநிலங்களுக்கு உத்தரவிட வேண்டும் என்று மத்திய அரசுக்கு அறிவுறுத்தியிருந்தது.

இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷண், சுபாஷ் ரெட்டி, எம்ஆர் ஷா ஆகியோர் முன்னிலையில் மீண்டும் இன்று விசாரிக்கப்பட்டது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் மூத்த வழக்கறிஞர் கே.வி. விஸ்வநாதனும், மத்திய அரசு தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவும் ஆஜராகினர்.

மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிடுகையில், “ கடந்த ஜூன் 17-ம் தேதி உத்தரவை மதித்து, மருத்துவர்கள் அனைவருக்கும் ஊதியத்தை நிறுத்தாமல் வழங்கிட வேண்டும் எனக் கோரி மாநில அரசுகளுக்கு 18-ம் தேதியே மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பிவிட்டது.

இதைப் பெரும்பலான மாநிலங்கள் பின்பற்றி வருகின்றன. ஆனால், கர்நாடகா, மகாராஷ்டிரா, திரிபுரா, பஞ்சாப் ஆகிய சில மாநிலங்கள் இந்த உத்தரவை நடைமுறைப்படுத்தவில்லை” எனத் தெரிவித்தார்.

மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் மூத்த வழக்கறிஞர் கே.வி. விஸ்வநாதன் கூறுகையில், “மத்திய அரசு மருத்துவர்களுக்கு 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுதல் கட்டாயமில்லை என்று அறிவித்துள்ளது.

ஆனால், மருத்துவர்கள் கரோனாவில் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்திக் கொண்டால் அந்தக் காலத்தை விடுப்பாகக் கருதி ஊதியத்தை மாநில அரசுகள் பிடித்தம் செய்கின்றன. பல்வேறு மாநிலங்களில் மருத்துவர்களுக்கு ஊதியம் முறையாக வழங்கப்படவில்லை” எனக் குற்றம் சாட்டினார்.

இதைக் கேட்ட நீதிபதிகள், “ உண்மையில், மருத்துவர்களுக்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தும் காலத்தில் ஊதியம் பிடித்தம் இருக்கிறதா இல்லையா” எனக் கேள்வி எழுப்பினர்.

இதற்குப் பதில் அளித்த சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “மருத்துவர்களுக்குத் தனிமைப்படுத்திக் கொள்ளும் காலத்தை விடுப்பாக எடுக்கக்கூடாது, ஊதியத்தைப் பிடித்தம் செய்யக்கூடாது என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தவிட்டுள்ளது.

ஆனால், எங்கள் உத்தரவை மகாராஷ்டிரா, கர்நாடகா, திரிபுரா, பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் பின்பற்றுவதில்லை. உத்தரவை நடைமுறைப்படுத்த உதவி செய்ய முடியாதவர்களாக இருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.

இதற்கு நீதிபதிகள் அமர்வு கூறுகையில் “மத்திய அரசின் உத்தரவுகளுக்கு மாநிலங்கள் இணங்கவில்லை என்றால், நீங்கள் உதவியற்றவர்கள் அல்ல என்பதல்ல. உங்களை உத்தரவை மாநில அரசுகள் நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்யுங்கள்.

தற்போது நாட்டில் பேரிடர் மேலாண்மைச் சட்டம் நடைமுறையில் இருந்து அதற்குரிய அதிகாரம் இருக்கிறது. உத்தரவைப் பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள். கரோனாவுக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கு உரிய காலத்தில் ஊதியத்தை மாநில அரசுகள் வழங்குவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுங்கள்” என அறிவுறுத்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in