

காஷ்மீருக்கு இருந்த சிறப்பு அந்தஸ்தான சட்டப்பிரிவு 370 கடந்த வருடம் ஆகஸ்ட் 5 இல் நீக்கப்பட்டது. இதன் ஒரு வருடம் நிறைவு பெற்றதை ஒட்டி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
ராமர் கோயில் பூமிபூஜை நடைபெறும் இதே நாளில் கடந்த வருடம் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. எனவே, இந்த நாளில் தீவிரவாதிகள் இந்தியாவின் முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்த முயற்சிக்கலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதன் மீதான விவர அறிக்கை மத்திய உள்துறை அமைப்பினரால் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் முக்கியமாக பிரதமர் வருகையால் உத்திரப்பிரதேசத்தின் அயோத்தி இடம் பெற்றுள்ளது.
இந்த ஆகஸ்ட் 5 இல் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அடிக்கல் நாட்டப்படுகிறது. இதன் விழாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பல்வேறு மாநில முதல்வர்களும், முக்கியப் பிரமுகர்களும் வருகை புரிகின்றனர்.
உபியில் உள்ள மற்ற தெய்வீகத்தலங்களிலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் அனைத்து மாநில தலைநகரங்களிலும் பாதுகாப்புகளை பலப்படுத்த மத்திய உள்துறை அறிவுறுத்தி உள்ளது.
உபியிலுள்ள நேபாள எல்லைகளிலும் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. இதில், உபி காவல்துறையின் அதிரடிப்படையினர், மத்திய எல்லைப் பாதுகாப்பு படையினருடன் இணைந்து பாதுகாப்பு பணியில் இறங்கி உள்ளனர்.
நாளை முதல் தொடரும் இந்த பாதுகாப்பு எச்சரிக்கை ஆகஸ்ட் 15 வரை நீட்டிக்கும் எனக் கருதப்படுகிறது. ஏனெனில், ஆகஸ்ட் 1 இல் முஸ்லிம்களின் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இதன் மூன்றாவது நாளான 3 ஆம் தேதி வட மாநில இந்துக்களின் ரக்ஷா பந்தன் பண்டிகையும் வரவிருக்கிறது. ஆகஸ்ட் 15 இந்தியாவின் சுதந்திரதினம் கொண்டாடப்படுகிறது.