

பல்கலைக்கழக இறுதியாண்டு, செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்யக் கோரிய மனுக்கள் தொடர்பாக இடைக்கால உத்தரவைப் பிறப்பிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
பல்கலைக்கழக இறுதியாண்டு, செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்யக் கோரி நாடு முழுவதும் 31 மாணவர்கள் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதி அஷோக் பூஷண் அமர்வு முன் விசாரணையில் உள்ளது.
இதில் யுஜிசி தரப்பில், ''பல்கலைக்கழக இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு ஒத்திவைக்கப்படாது. பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் தேர்வை நடத்த இசைவு தெரிவித்துள்ளன. மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்கள் தன்னிச்சையாக ரத்து செய்ததை ஏற்றுக்கொள்ள முடியாது'' எனத் தெரிவிக்கப்பட்டது.
மாணவர்கள் தரப்பில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட விளக்க மனுவில், “நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கரோனா பாதிப்பு, அசாமில் ஏற்பட்டுள்ள வெள்ளம், ஜம்மு-காஷ்மீரில் நிலவும் இணையதள மற்றும் இணையசேவை கட்டுப்பாடுகள், அதேபோல நாட்டில் பல்வேறு பகுதிகளில் அமலில் உள்ள பொதுமுடக்கம் ஆகிய அம்சங்களை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வழிகாட்டுதல்களில் கருத்தில் கொள்ளவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.
யுஜிசி சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வைத்த வாதத்தில், ''செப்டம்பர் மாதம் இறுதிக்குள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள பல்கலைக்கழக இறுதியாண்டு, செமஸ்டர் தேர்வுகளை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துவிட்டதென்ற எண்ணத்துக்கு ஆட்படக்கூடாது. மாணவர்கள் தொடர்ந்து தேர்வுக்குத் தயார் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்.
பல்கலைக்கழக இறுதியாண்டு, செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரிய மனுக்கள் தொடர்பாக இடைக்கால உத்தரவைப் பிறப்பிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்த விவகாரம் தொடர்பாக, மாநில பேரிடர் பேரிடர் மேலாண்மைக் குழுவின் அறிக்கையைத் தாக்கல் செய்ய மகாராஷ்டிரா அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
பின்னணி:
பல்கலைக்கழக இறுதியாண்டுத் தேர்வுகள் கட்டாயம் நடத்தப்படும் என்ற யுஜிசி அறிவிக்கைக்கு எதிராக நாடு முழுவதும் இருந்து 31 மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணையில் இருந்தது.
மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள், “தற்போது கரோனா வைரஸ் பரவல் என்பது கணிக்க முடியாத ஒன்றாக உள்ளது. தற்போது இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 50 ஆயிரம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே இந்தச் சூழலில் தேர்வுகளை நடத்துவது என்பது மாணவர்களுக்குத் தொற்று ஏற்பட வழிவகுக்கும்’’ என வாதிட்டனர்.
மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதத்தில், ''நாடு முழுவதிலும் உள்ள 818 பல்கலைக்கழகங்களில் 209 பல்கலைக்கழகங்கள் தங்களது தேர்வுகளை நடத்தி முடித்துள்ளன. 394 பல்கலைக்கழகங்கள் இறுதி செமஸ்டர் தேர்வை நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
ஆனால், 35 பல்கலைக்கழகங்கள் மட்டும் இன்னும் இறுதித் தேர்வினை நடத்தாமல் உள்ளன. மேலும் இணைய வழித் தேர்வு, உரிய சமூக இடைவெளியுடன் தேர்வுகளை நடத்துவது போன்ற பல்வேறு வழிமுறைகளை வைத்து இருக்கிறோம்'' எனத் தெரிவித்தார்.
இதனையடுத்து, நீதிபதிகள் இந்த விவகாரம் தொடர்பாக யுஜிசி அமைப்பு வரும் புதன்கிழமைக்குள் (29-ம் தேதிக்குள்) பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்திவைத்திருந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது யுஜிசி தரப்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
அதில் கூறப்பட்டிருப்பதாவது:
“தற்போது இறுதியாண்டுத் தேர்வுகளை ரத்து செய்தால் அது மாணவர்களின் எதிர்காலத்தைச் சரிசெய்ய முடியாத அளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். செப்டம்பர் வரை நடத்தப்படும் தேர்வுகளை எழுத முடியாத மாணவர்களுக்கு, சிறப்புத் தேர்வு சிறிது காலத்துக்குப் பின் நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.
மாணவர்களின் கல்வி எதிர்காலத்தைப் பாதுகாக்கவும், அவர்களின் உடல்நலம், சுகாதாரத்தைக் கருத்தில் கொண்டும் செப்டம்பர் 30-க்குள் தேர்வு நடத்த உத்தரவிடப்பட்டது. இந்த விவகாரத்தில் நிபுணர்களின் ஆலோசனையின் படியே தேர்வுகள் நடத்தத் தீர்மானிக்கப்பட்டது.
தேர்வுகள் நடத்த புதிய காலக்கெடுவை நீதிமன்றம் தீர்மானிக்கக் கூடாது. தேர்வுகளை ரத்து செய்த மகாராஷ்டிரா, டெல்லி அரசின் முடிவுகள் யு.ஜி.சி.யின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு மாறானது. மாநில அரசுகளிடம் கலந்தாலோசித்த பின்னரே தேர்வுகள் நடத்த முடிவு செய்யப்பட்டது. எனவே, இதைக் கருத்தில் கொண்டு மனுக்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும்’’.
இவ்வாறு யுஜிசி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் யுஜிசி தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்துக்கு, மனுதாரர்கள் (மாணவர்கள்) சார்பில் விளக்க மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
அதில், ''நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கரோனா பாதிப்பு, அசாமில் ஏற்பட்டுள்ள வெள்ளம், ஜம்மு-காஷ்மீரில் நிலவும் இணையதள மற்றும் இணையசேவை கட்டுப்பாடுகள், அதேபோல நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமலில் உள்ள பொதுமுடக்கம் ஆகிய அம்சங்களைப் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வழிகாட்டுதல்களில் கருத்தில் கொள்ளவில்லை'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கு ஆகஸ்டு 10-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.