Last Updated : 31 Jul, 2020 01:43 PM

 

Published : 31 Jul 2020 01:43 PM
Last Updated : 31 Jul 2020 01:43 PM

ஈகைத் திருநாள்: கேரளாவில் சமூக விலகலைக் கடைப்பிடித்து முஸ்லிம்கள் மசூதிகளில் தொழுகை

கரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக கேரளாவில் கடும் கட்டுப்பாடுகளுடன் சமூக விலகலைக் கடைப்பிடித்து ஈகைத் திருநாளில் (பக்ரீத் பண்டிகை) முஸ்லிம்கள் மசூதிகளில் தொழுகை நடத்தினர்.

ரமலான் பெருநாள் கொண்டாட்டத்தின்போது கரோனா பரவல் உச்சத்தில் இருந்ததால், மசூதி திறக்கப்படாமல், முஸ்லிம்கள் வீட்டிலேயே தொழுகை நடத்தினர். ஆனால், பக்ரீத் பண்டிகையான இன்று மசூதிகளில் தொழுகை நடத்திக்கொள்ள கேரள அரசு நேற்று மாலை அனுமதி அளித்தது.

இதன்படி பல்வேறு கட்டுப்பாடுகளுடன் சமூக விலகலைக் கடைப்பிடித்து, முகக்கவசம் அணிந்து, சானிடைசர் பயன்படுத்தி, முஸ்லிம்கள் தொழுகை நடத்தினர்.

வளைகுடா நாடுகளில் ஈகைத் திருநாள் இன்று (ஜூலை31) கொண்டாடப்படும் என்று அந்நாடுகளின் தலைமைக் காஜி அறிவித்தார். அதை கேரள முஸ்லிம்கள் பின்பற்றுவதால், மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் இன்று ஈகைத் திருநாள் கொண்டாடப்பட்டது.

ஆனால், டெல்லி ஜூம்மா மசூதி ஷாகி இமாம் ஆகஸ்ட் 1-ம் தேதி ஈகைத் திருநாள் கொண்டாடப்படும் என்று அறிவித்திருந்தார். இதன்படி நாளை நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் ஈகைத் திருநாள் கொண்டாடப்படுகிறது.

கேரளாவில் இன்று ஈகைத் திருநாளின்போது மசூதிகளில் முஸ்லிம் மக்கள் தொழுகை நடத்திக்கொள்ள கேரள அரசு நேற்று அனுமதியளித்தது. இதன்படி மசூதிகளில் 100 பேருக்கு மேல் கூடக்கூடாது, அனைவரும் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும், முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும், மசூதிகளில் வெளியேறும், நுழைவுப் பகுதிகளில் சானிடைசர் வைத்திருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

அதேசமயம், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் மசூதிகள் அமைந்திருந்தால் அங்கு மக்கள் தொழுகை நடத்த அனுமதிக்கப்படாது என்று அறிவித்திருந்தது. மேலும், முஸ்லிம் மக்கள் கூட்டமாக பக்ரீத் தொழுகை நடத்தவும் தடை விதிக்கப்பட்டது.

கேரள அரசின் அனுமதியால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இல்லாத மசூதிகளில் முஸ்லிம்கள் சமூக விலகலைப் பின்பற்றி தொழுகை நடத்தி, ஈகைத் திருநாளைக் கொண்டாடினர். கோழிக்கோடு, திருவனந்தபுரம், கொச்சின், எர்ணாகுளம், மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் வழக்கம் போல் முஸ்லிம்கள் உற்சாகத்துடன் ஈகைத் திருநாள் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டாடினர்.

கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் ட்விட்டரில் முஸ்லிம் மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

— ANI (@ANI) July 31, 2020

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x