

மேற்கு வங்கத்தில் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட 6 நகரங்களில் இருந்து கொல்கத்தாவுக்குப் பயணிகள் விமானச் சேவை நிறுத்தம் ஆகஸ்ட் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, ஜூலை 6 முதல் 19-ம் தேதி வரை 6 நகரங்களுக்குப் பயணிகள் விமானச் சேவை நிறுத்தப்பட்டு, அது ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. இப்போது மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பைத் தொடர்ந்து கடந்த மார்ச் 25-ல் தேசிய அளவிலான ஊரடங்கு அமலுக்கு வந்தது. அப்போது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானச் சேவை நிறுத்தப்பட்டது. பிறகு 2 மாதங்களுக்குப் பிறகு மே 25-ல் உள்நாட்டு விமானச் சேவை மீண்டும் தொடங்கப்பட்டது.
ஆனால், மேற்கு வங்க மாநிலத்தில் கரோனாவில் தாக்கம் குறையாததைத் தொடர்ந்து ரயில் மற்றும் விமானச் சேவையைக் குறைக்க வேண்டும் என்று மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்திருந்தார்.
தற்போது மேற்கு வங்கத்தில் கரோனாவில் ஏறக்குறைய 20 ஆயிரம் பேர் சிகிச்சையில் உள்ளனர். 1,536 பேர் கரோனாவில் உயிரிழந்துள்ளனர். கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் கரோனா ஹாட்ஸ்பாட்களாக இருக்கும் 6 நகரங்களில் இருந்து மட்டும் விமானப் போக்குவரத்துத் தடை செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, கொல்கத்தா நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையம் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “டெல்லி, மும்பை, புனே, சென்னை, நாக்பூர், அகமதாபாத் ஆகிய 6 நகரங்களில் விமானங்கள் கொல்கத்தா விமான நிலையத்துக்கு வருவதற்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. வரும் 31-ம் தேதியுடன் முடிவடைய இருந்த கட்டுப்பாடு ஆகஸ்ட் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மேற்கு வங்க அரசு நேற்று மாலை வெளியிட்ட அறிவிப்பில், “கரோனா வைரஸ் பரவல் அதிகரித்திருப்பதைக் கருத்தில் கொண்டு டெல்லி, மும்பை, புனே, நாக்பூர், சென்னை, அகமதாபாத் ஆகிய கரோனா ஹாட்ஸ்பாட் நகரங்களில் இருந்து கொல்கத்தாவுக்கு விமானச் சேவையை ஆகஸ்ட் 15-ம் தேதிவரை நிறுத்திக்கொள்ள மேற்கு வங்க அரசுக்கு மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது” எனத் தெரிவித்துள்ளது.
இதுமட்டுமல்லாமல் மேற்கு வங்க அரசு கொண்டு வந்துள்ள லாக்டவுனால் ஆகஸ்ட் மாதத்தில் குறிப்பிட்ட நாட்களில் விமானப் போக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது என்று கொல்கத்தா விமான நிலையம் அறிவித்துள்ளது. இதன்படி ஆகஸ்ட் 5-ம் தேதி, 8-ம் தேதி, 16-ம் தேதி, 17-ம் தேதி, 23, 24-ம்தேதி, 31-ம் தேதிகளில் ஊரடங்கு இருப்பதால், அன்றைய தினம் விமானச் சேவை இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.