Last Updated : 31 Jul, 2020 08:58 AM

 

Published : 31 Jul 2020 08:58 AM
Last Updated : 31 Jul 2020 08:58 AM

முதலில் ரூ.10 கோடி; நம்பிக்கை வாக்கெடுப்பு அறிவித்தபின் எம்எல்ஏக்களிடம் பேரம் அதிகரிப்பு: ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் குற்றச்சாட்டு

ஆகஸ்ட் 14-ம் தேதி ராஜஸ்தான் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்போவதாக நான் அறிவித்தபின், எம்எல்ஏக்களை விலை கொடுத்து வாங்க பேரம் பேசுவது அதிகரித்துள்ளது என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் குற்றம்சாட்டியுள்ளார்.

ராஜஸ்தானில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் முதல்வராக இருக்கும் அசோக் கெலாட்டுக்கும், துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட்டுக்கும் இடையே அதிகார மோதல் ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ் கூட்டங்களில் சச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்எல்ஏக்கள் தனி அணியாகச் செயல்படத் தொடங்கியுள்ளனர். ஆனால், தனக்கு பெரும்பான்மைஇருக்கு என்பதை முதல்வர் அசோக் கெலாட் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

சட்டப்பேரவையைக் கூட்டி தனது பெரும்பான்மையை நிரூபிக்க முடிவு செய்த முதல்வர் அசோக் கெலாட், ஆளுநரிடம் பேரவையைக் கூட்ட 3 முறை அரசு சார்பில் கடிதம் அளித்தும் அதை ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா திருப்பி அனுப்பினார். 4-வது முறையாக அமைச்சரவை அனுப்பிய கடிதத்தை ஏற்ற ஆளுநர் மிஸ்ரா, ஆகஸ்ட் 14-ம் தேதி பேரவையைக் கூட்ட உத்தரவிட்டுள்ளார். பேரவையை கூட்டும் போது பல்வேறு கூட்டுப்பாடுகளையும் ஆளுநர் மிஸ்ரா விதித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் அசோக் கெலாட் நேற்று நிரூபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

ஆகஸ்ட் 14-ம் தேதி பேரவை கூட்டப்படுகிறது. இந்த கூட்டத்தில் நிச்சயம் பெரும்பான்மையை நிரூபிப்போம். அதேசமயம், மாநிலத்தின் பொருளாதாரச் சூழல், கரோனா வைரஸ் பரவல் குறித்தும் அரசு ஆலோசிக்கும்.

ஆகஸ்ட் 14-ம் தேதி சட்டப்பேரவை கூட்டப்படும் என்று ஆளுநர் அறிவித்தபின் எனக்கு பல எம்எல்ஏக்கள் தொலைப்பேசி வாயிலாகப் பேசினார்கள். முன்பு எம்எல்ஏக்களுக்கு முதல்கட்டமாக ரூ.10 கோடியும், பின்னர், ரூ.15 கோடியும் பேரம் பேசினார்கள்.

பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்போவதாக நான் அறிவித்தபின் முன்பைவிட இப்போது, எம்எல்ஏக்களுக்கு பேரம் பேசி, தங்கள் பக்கம் இழுக்க முயல்கிறார்கள். எவ்வளவு வேண்டும் என்று கேட்கிறார்கள், இதன் மூலம் எம்எல்ஏக்களுக்கான விலை உயர்ந்துவிட்டது. குதிரைபேரத்தில் யார் ஈடுபடுகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.

காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் கட்சிக்கு உண்மையாக இருப்போம், பணம் வாங்க மாட்டோம் என்று வெளியே சொன்னால் மட்டும் போதாது, அவர்கள் கட்சிக்கு திரும்ப வேண்டும். எந்தெந்த எம்எல்ஏக்கள் எல்லாம் முதல்கட்டமாக பணம் பெற்றுள்ளார்கள் எனத் தெரியாது. சிலர் பணம் பெறாமலும் இருக்கலாம், அவர்கள் கட்சிக்கு திரும்ப வேண்டும் என விரும்புகிறேன்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து தேர்தலில் போட்டியிட்டு எம்எல்ஏ பதவி பெற்றவர்கள் முதலில் கட்சிக்கு உண்மையாகவும், அரசுக்கு நேர்மையாகவும் நடப்பது கடமையாகும். தங்கள் தொகுதியைப் பற்றி மக்கள் என்ன நினைப்பார்கள் என்பது குறித்து அவர்களுக்கு கவலையில்லை. ஆனால், பின்னர் அவர் உணர்வார்கள்.

கடந்த ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சியின் 6 எம்எல்ஏக்கள் காங்கிரஸில் அவர்களின் முழுவிருப்பத்துடன்தான் இணைந்தார்கள். ஆனால், இப்போது மாயாவதி புகார் தெரிவிப்பது நியாயமற்றது.

பாஜகவின் நலனுக்காக மாயாவதி அறிக்கைகளை விடுகிறார். தனது கட்சியின் மீது சிபிஐ, அமலாக்கப்பிரிவு, வருமானவரித்துறை மூலம் மத்திய அரசு ஏதேனும் தொந்தரவு கொடுத்துவிடும் என மாயாவதி அஞ்சுகிறார்.

காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் அனைவரும் குர்கான் உள்ள மனேசர் பகுதியில் தங்கியுள்ளார்கள். அவர்களை ராஜஸ்தான் போலீஸார் தொடர்பு கொள்ளமுடியவில்லை. என்னுடைய அரசைக் கவிழ்க்கும் முயற்சியில் மத்திய அமைச்சர் கஜேந்திரசிங் செகாவத் ஈடுபட்டுள்ளார்.

கூட்டுறவு வங்கி ஊழல் வழக்கில் போலீஸார் விசாரணையைத் தொடங்கிய நிலையிலும் கஜேந்திர செகாவத் தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை கவிழ்ப்பதில் இருக்கும் நோக்கத்தை அமித்ஷா கைவிட்டு, கரோனா வைரஸில் மக்களைக் காக்கும் பணியில் ஈடுபட வேண்டும்

இவ்வாறு அசோக் கெலாட் தெரிவி்த்தார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x