Published : 31 Jul 2020 07:57 AM
Last Updated : 31 Jul 2020 07:57 AM

லடாக் எல்லையில் சீன ராணுவத்துடனான மோதலில் வீர மரணமடைந்த 20 வீரர்களின் பெயர்கள் தேசிய போர் நினைவகத்தில் பொறிக்கப்படும்

புதுடெல்லி

சீன ராணுவத்துடனான மோதலில் வீர மரணமடைந்த 20 இந்திய வீரர்களின் பெயர்கள் தேசிய போர் நினைவகத்தில் பொறிக்கப்பட உள்ளன.

கடந்த மே மாத தொடக்கத்தில் கிழக்கு லடாக்கின் 4 முனைகளில் சீன வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்றனர். அவர்களை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இதன்காரணமாக கடந்த மே 5, 6-ம் தேதிகளில் லேசான கைகலப்பு ஏற்பட்டது. இதன்பின் கடந்த ஜூன் 15-ம் தேதி லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீன வீரர்களிடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது.

சீன தரப்பில் 350 வீரர்களும் இந்திய தரப்பில் கர்னல் சந்தோஷ் பாபு தலைமையில் 50 வீரர்களும் இருந்தனர். எனினும் இந்திய வீரர்கள் தீரமுடன் போரிட்டனர். இதில் சீன தரப்பில் 40 வீரர்கள் வரை உயிரிழந்தனர். இந்திய தரப்பில் தெலங்கானாவை சேர்ந்த கர்னல் சந்தோஷ் பாபு, தமிழகத்தைச் சேர்ந்த வீரர் பழனி உட்பட 20 வீரர்கள் வீரமரணமடைந்தனர்.

இந்த 20 வீரர்களையும் கவுரப்படுத்தும் வகையில் டெல்லியில் அமைந்துள்ள தேசிய நினைவிடத்தில் அவர்களின் பெயர்கள் கல்வெட்டில் பொறிக்கப்பட உள்ளன. பெயர் பொறிக்கும் பணிக்கு சில மாதங்கள் ஆகும் என்று மத்திய பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தலைநகர் டெல்லியில் இந்தியா கேட் அருகில் சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் தேசிய போர் நினைவகம் அமைந்துள்ளது. 1947 இந்தியா-பாகிஸ்தான் போர், 1962 இந்தியா-சீனா போர், 1961 கோவா போர், 1971 இந்தியா- பாகிஸ்தான் போர், சியாச்சின் போர் மற்றும் கார்கில் போரில் வீர மரணமடைந்தவர்களின் பெயர்கள் தேசிய போர் நினைவகத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. அவர்களோடு கல்வான் பள்ளத்தாக்கில் உயிரிழந்த வீரர்களின் பெயர்களும் இணைய உள்ளன. தெலங்கானாவை சேர்ந்த கர்னல் சந்தோஷ் பாபு, தமிழகத்தைச் சேர்ந்த வீரர் பழனி உட்பட 20 வீரர்கள் வீரமரணமடைந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x