Published : 31 Jul 2020 07:31 AM
Last Updated : 31 Jul 2020 07:31 AM

காணொலி காட்சி மூலம் மொரீஷியஸ் உச்ச நீதிமன்ற கட்டிடத்தை திறந்தார் மோடி: இந்திய உறவில் நிபந்தனை இல்லை என உறுதி

மொரீஷியஸ் தலைநகர் போர்ட் லூயிஸில் கட்டப்பட்டுள்ள உச்ச நீதிமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக நேற்று திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், இந்திய உறவில் எவ்வித நிபந்தனைகளும் கிடையாது என்று தெரிவித்தார்.

இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடு மொரீஷியஸ். ஆங்கிலேயர் ஆட்சியின்போது இந்தியாவில் இருந்து மொரீஷியஸுக்கு தொழிலாளர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

அந்த நாட்டின் தற்போதைய மக்கள் தொகை சுமார் 13 லட்சமாகும். இதில் 68 சதவீதம் பேர் இந்திய வம்சாவளியினர். இதில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் தமிழர்கள். மொரீஷியஸின் தேசிய விடுமுறைகளில் தைப்பூசமும் ஒன்றாகும். இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரவிந்த் ஜக்நாத் அந்த நாட்டின் பிரதமராக பதவி வகிக்கிறார்.

மொரீஷியஸ் தலைநகர் போர்ட் லூயிஸில் இந்தியாவின் நிதியுதவியுடன் பிரம்மாண்ட உச்ச நீதிமன்றம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. போர்ட் லூயிஸில் நடைபெற்ற விழாவில் அந்த நாட்டு பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து காணொலி வாயிலாக மொரீஷியஸ் உச்ச நீதிமன்ற கட்டிடத்தை திறந்துவைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

இந்தியாவின் 'சாகர்' வெளியுறவு கொள்கையின்படி பிராந்திய நாடுகளின் பாதுகாப்பு, மற்றும் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம். இந்த திட்டம் குறித்து முதல்முறையாக மொரீஷியஸுடன்தான் பேச்சுவார்த்தை நடத்தினேன். இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள நாடுகளுடனும் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகிறோம்.

வளர்ச்சி என்ற பெயரில் சில நாடுகள், பின்தங்கிய நாடுகளுக்கு உதவுகின்றன. பின்னர் அப்படியே காலனி, ஏகாதிபத்திய ஆட்சிக்கு வழிவகுக்கின்றன. இந்தியாவை பொறுத்தவரை கூட்டணியில் உள்ள நட்பு நாடுகளை மதிக்கிறோம். எங்களுடனான உறவில் எவ்வித நிபந்தனைகளும் கிடையாது.

இவ்வாறு அவர் பேசினார்.

துறைமுக மேம்பாட்டுத் திட்டம் என்ற பெயரில் பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், மியான்மர் உள்ளிட்ட நாடுகளில் சீனா கால் பதித்துள்ளது. அந்த நாடுகளுக்கு சீனா பெரும் தொகையை கடனாக அளித்துள்ளது.

தற்போது அந்த நாடுகள் கொடுத்த கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல் சீனாவிடம் அடிமைப்பட்டு கிடப்பதாகக் கூறப்படுகிறது. சீனாவின் பெயரைக் குறிப்பிடாமல் பிரதமர் நரேந்திர மோடி அந்த நாட்டை மறைமுகமாக விமர்சித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x