

அயோத்தில் ராமர் கோயில் கட்டுமானப் பணிக்கான பூமிபூஜை ஆகஸ்ட் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று அடிக்கல் நாட்ட உள்ளார். அயோத்தியில் இதற்கான ஏற்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளன.
இந்நிலையில் அயோத்தி ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் ஒய்.பி.சிங் நேற்று கூறியதாவது:
திட்டமிட்டபடி விஷயங்கள் நடந்தால் ஆகஸ்ட் 5-ம் தேதி அஞ்சல் தலைகளும் வெளியிடப்படும். இந்த அஞ்சல் தலைகளில் ஒன்று ராமர் கோயில் மாதிரியாக இருக்கும். மற்றொன்று பிற நாடுகளில் ராமரின் முக்கியத்துவத்தை சித்திரிக்கும் காட்சிகளை கொண்டிருக்கும். உலகம் முழுவதும் ராமரின் கலாச்சார இருப்பை வெளிப்படுத்தும் வகையில் மிகப்பெரிய சுவரொட்டிகள் மற்றும் கட்-அவுட்களை அயோத்தி ஆராய்ச்சி நிறுவனம் தயாரித்து வருகிறது. இவை, பூமிபூஜை விழா செல்லும் வழியில் வைக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.