Published : 30 Jul 2020 06:12 PM
Last Updated : 30 Jul 2020 06:12 PM

பல்கலைக்கழக இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் ரத்து இல்லை: உச்ச நீதிமன்றத்தில் யுஜிசி பதில்

பல்கலைக்கழக இறுதியாண்டு, செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரிய வழக்கில் பல்கலைக்கழக இறுதியாண்டு, செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்யும் திட்டமில்லை என யுஜிசி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

பல்கலைக்கழக இறுதியாண்டுத் தேர்வுகள் கட்டாயம் நடத்தப்படும் என்ற யுஜிசி அறிவிக்கைக்கு எதிராக நாடு முழுவதும் இருந்து 31 மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணையில் இருந்தது.

மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள், “தற்போது கரோனா வைரஸ் பரவல் என்பது கணிக்க முடியாத ஒன்றாக உள்ளது. தற்போது இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 50 ஆயிரம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே இந்தச் சூழலில் தேர்வுகளை நடத்துவது என்பது மாணவர்களுக்குத் தொற்று ஏற்பட வழிவகுக்கும்’’ என வாதிட்டனர்.

மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதத்தில், ''நாடு முழுவதிலும் உள்ள 818 பல்கலைக்கழகங்களில் 209 பல்கலைக்கழகங்கள் தங்களது தேர்வுகளை நடத்தி முடித்துள்ளன. 394 பல்கலைக்கழகங்கள் இறுதி செமஸ்டர் தேர்வை நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

ஆனால், 35 பல்கலைக்கழகங்கள் மட்டும் இன்னும் இறுதித் தேர்வினை நடத்தாமல் உள்ளன. மேலும் இணைய வழித் தேர்வு, உரிய சமூக இடைவெளியுடன் தேர்வுகளை நடத்துவது போன்ற பல்வேறு வழிமுறைகளை வைத்து இருக்கிறோம்'' எனத் தெரிவித்தார்.

இதனையடுத்து, நீதிபதிகள் இந்த விவகாரம் தொடர்பாக யுஜிசி அமைப்பு வரும் புதன்கிழமைக்குள் (29-ம் தேதிக்குள்) பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்திவைத்திருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது யுஜிசி தரப்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

அதில் கூறப்பட்டிருப்பதாவது:

“தற்போது இறுதியாண்டுத் தேர்வுகளை ரத்து செய்தால் அது மாணவர்களின் எதிர்காலத்தைச் சரிசெய்ய முடியாத அளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். செப்டம்பர் வரை நடத்தப்படும் தேர்வுகளை எழுத முடியாத மாணவர்களுக்கு, சிறப்புத் தேர்வு சிறிது காலத்துக்குப் பின் நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.

மாணவர்களின் கல்வி எதிர்காலத்தைப் பாதுகாக்கவும், அவர்களின் உடல்நலம், சுகாதாரத்தைக் கருத்தில் கொண்டும் செப்டம்பர் 30-க்குள் தேர்வு நடத்த உத்தரவிடப்பட்டது. இந்த விவகாரத்தில் நிபுணர்களின் ஆலோசனையின் படியே தேர்வுகள் நடத்தத் தீர்மானிக்கப்பட்டது.

தேர்வுகள் நடத்த புதிய காலக்கெடுவை நீதிமன்றம் தீர்மானிக்கக் கூடாது. தேர்வுகளை ரத்து செய்த மகாராஷ்டிரா, டெல்லி அரசின் முடிவுகள் யு.ஜி.சி.யின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு மாறானது. மாநில அரசுகளிடம் கலந்தாலோசித்த பின்னரே தேர்வுகள் நடத்த முடிவு செய்யப்பட்டது. எனவே, இதைக் கருத்தில் கொண்டு மனுக்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும்“.

இவ்வாறு யுஜிசி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் யுஜிசி தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்துக்கு, மனுதாரர்கள் (மாணவர்கள்) சார்பில் விளக்க மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ''நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கரோனா பாதிப்பு, அசாமில் ஏற்பட்டுள்ள வெள்ளம், ஜம்மு-காஷ்மீரில் நிலவும் இணையதள மற்றும் இணையசேவை கட்டுப்பாடுகள், அதேபோல நாட்டில் பல்வேறு பகுதிகளில் அமலில் உள்ள பொதுமுடக்கம் ஆகிய அம்சங்களைப் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வழிகாட்டுதல்களில் கருத்தில் கொள்ளவில்லை'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்த வழக்கு ஜூலை 31-ம் தேதிக்கு ( நாளைக்கு) ஒத்திவைக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x