

சொத்துக் குவிப்பு வழக்கில் முதல் தகவல் அறிக்கையின் (எப்ஐஆர்) நகலை வழங்க சிபிஐ-க்கு உத்தர விடக் கோரி இமாச்சலப் பிரதேச முதல்வர் வீரபத்ர சிங் (81) டெல்லி சிபிஐ நீதிமன்றத்தை அணுகி உள்ளார்.
இதுதொடர்பாக அவரது சார்பில் வழக்கறிஞர் விஜய் அகர்வால், சிபிஐ நீதிபதி எஸ்.சி.ஜெயின் முன்னிலையில் நேற்று ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:
வருமானத்துக்கு பொருந்தாத வகையில் சொத்து சேர்த்ததாக மனுதாரர் வீரபத்ர சிங் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சிபிஐ கடந்த 23-ம் தேதி எப்ஐஆர் பதிவு செய்துள்ளது. இந்த எப்ஐஆரின் நகலை மனுதாரருக்கு வழங்க சிபிஐ-க்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் (2009-2011) வீரபத்ர சிங் மத்திய அமைச்சராக பதவி வகித்தார். இந்த காலகட்டத் தில் வருமானத்துக்கு பொருந்தாத வகையில் சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது.
சிங் தனது பெயரிலும், தனது குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும் எல்ஐசி முகவர் சவுகான் மூலம் ரூ.6.1 கோடியை முதலீடு செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்த வழக்கு ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு சிபிஐ நீதிமன்றத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, டெல்லி, சிம்லா உள்ளிட்ட நகரங்களில் உள்ள வீரபத்ர சிங்கின் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் கடந்த சனிக்கிழமை சோதனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.