Last Updated : 30 Jul, 2020 02:56 PM

 

Published : 30 Jul 2020 02:56 PM
Last Updated : 30 Jul 2020 02:56 PM

கேரள இசையமைப்பாளர் பாலபாஸ்கர், மகள் கார் விபத்து மரணத்தில் மர்மம் எனப் புகார்: விசாரணையைக் கையில் எடுத்தது சிபிஐ

கேரளாவில் புகழ்பெற்ற இசையமைப்பாளர் பாலபாஸ்கர், அவரின் மகள் கடந்த 2018-ம் ஆண்டு கார் விபத்தில் மரணமடைந்தனர். இவர்கள் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரின் பெற்றோர் அளித்த புகாரையடுத்து, நேற்று முறைப்படி சிபிஐ விசாரணையை ஏற்றது.

கேரளாவின் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரபல இசையமைப்பாளர் பாலபாஸ்கர். இவர் கடந்த 2018-ம் ஆண்டு, செப்டம்பர் 25-ம் தேதி தன் மனைவி லட்சுமி, 18 மாதக் குழந்தை தேஜஸ்வி ஆகியோருடன் திருச்சூர் கோயிலுக்குச் சென்று திரும்பினார்.

அப்போது வரும் வழியில் தேசிய நெடுஞ்சாலை 66-ல் பள்ளிபுரம் எனும் இடத்தில் சிஆர்பிஎஃப் படை முகாம் அருகே பாலபாஸ்கரின் கார் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பாலபாஸ்கரின் குழந்தை தேஜஸ்வி அதே நாளில் உயிரிழந்தார். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட இசையமைப்பாளர் ஒரு வார தீவிர சிகிச்சைக்குப் பிறகு அக்டோர் 2-ம் தேதி உயிரிழந்தார். அவரின் மனைவி லட்சுமி, கார் ஓட்டுநர் அர்ஜூன் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் குணமடைந்தனர்.

பாலபாஸ்கர், அவரின் குழந்தையின் உடற்கூறு ஆய்வு அறிக்கையில், குழந்தை தேஜஸ்வி தலையில் காயம் ஏற்பட்டு உயிரிழந்தார் என்றும், பாலபாஸ்கர் தலையிலும், மார்பிலும் காயம் ஏற்பட்டு உயிரிழந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே பாலபாஸ்கரின் தந்தை உன்னி கேரள முதல்வர் பினராயி விஜயனைச் சந்தித்து மனு ஒன்றை அளித்தார். அதில் தன்னுடைய மகன் பாலபாஸ்கர், பேத்தி தேஜஸ்வி கார் விபத்தில் இறந்ததில் மர்மம் இருப்பதாகவும், தங்கம் கடத்தலில் தொடர்பில் இருப்பவர்கள் இதில் சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்றும், பாலபாஸ்கர் இறந்தபின் அவரின் வங்கிக் கணக்கில் சந்தேகத்துக்கிடமான வகையில் வங்கிப் பரிமாற்றம் நடந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டார்.

இதற்கிடையே இந்த வழக்கில் திருவனந்தபுரத்தில் உள்ள சிபிஐ தரப்பு அதிகாரிகள் நேற்று சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கூறுகையில், “பாலபாஸ்கர், அவரின் மகள் தேஜஸ்வி கார் விபத்தில் இறந்தது தொடர்பாக பாலபாஸ்கர் பெற்றோருக்கு அழுத்தமான சந்தேகம் இருக்கிறது. கேரள போலீஸார் வழக்கை விபத்து என முடித்ததில் கேள்வி எழுப்புகிறார்கள்” எனத் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, வழக்கின் விசாரண அறிக்கையை முறைப்படி கேரள போலீஸாரிடம் இருந்து சிபிஐ அதிகாரிகள் நேற்று பெற்றுக்கொண்டு அவர்கள் விசாரணையை நடத்தத் தொடங்கியுள்ளனர்.

இதற்கிடையே பாலபாஸ்கரின் தந்தை உன்னி சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் கூறுகையில், ''என்னுடைய மகன் விபத்தில் இறந்து 7 மாதங்களுக்குப் பின்னர் தங்கம் கடத்தல் தொடர்பாகத் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் பிரகாஷன் தம்பி மற்றும் விஷ்ணு ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

இதில் பிரகாஷன் தம்பியிடம் நடந்த விசாரணையில், இசையமைப்பாளர் பாலபாஸ்கரிடம் மேலாளராகப் பணிபுரிந்ததாகவும் விஷ்ணு, பாலபாஸ்கருக்கு நண்பர் என்றும் தெரிவித்தார்.

என் மகனின் நண்பர்கள் தங்கம் கடத்தலில் கைதாகியுள்ளார்கள் என்பதால் எனது மகன் மரணத்தில் மர்மம் இருப்பதாகச் சந்தேகித்தேன். என் மகன் இறந்தபின் அவரின் வங்கிக் கணக்கில் பணப் பரிமாற்றம் இருந்ததையும் அறிந்தேன்.

இதனால் சந்தேகமடைந்து முதல்வரிடம் மனு அளித்தேன். வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. சிபிஐ விசாரணை நடத்தும்போது, பாலபாஸ்கர் விபத்துக்குள்ளானபோது கார் ஓட்டுநராக இருந்த அர்ஜூனிடமும் விசாரணை நடத்த வேண்டும். அவருக்கும் தங்கம் கடத்தலில் தொடர்புள்ளவர்களுக்கும் தொடர்பு இருக்கிறதா என்று விசாரிக்க வேண்டும்'' என்று அவர் தெரிவித்திருந்தார்.

பாலபாஸ்கர் மரணம் தொடர்பாக மீண்டும் விசாரணை நடத்தத் தொடங்கியுள்ள சிபிஐ அதிகாரிகள் விபத்து நடந்த பகுதியை மீண்டும் ஆய்வு செய்ய உள்ளனர். அங்கு கிடைத்த கைரேகைகள், தடயங்கள், புகைப்படங்கள் ஆகியவற்றையும் ஆய்வு செய்ய உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதுமட்டுமல்லாமல் பாலபாஸ்கர் எங்கெல்லாம் முதலீடு செய்திருந்தார், அவரின் பணப் பரிமாற்றம், வங்கிக் கணக்கு, உள்ளிட்டவற்றையும் ஆய்வு செய்ய உள்ளதாக சிபிஐவட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x