

மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனாவுடன் கூட்டணி அமைக்க பாஜக தயாராக உள்ளதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தலைமையில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. சிவசேனா ஆட்சிக்கு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஆதரவளித்து வருகின்றன. இதனிடையே, சமீப காலமாக சிவசேனாவுடன் கூட்டணி அமைக்க பாஜக முயற்சித்து வருவதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது அம்மாநில அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், மகாராஷ்டிரா பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் மும்பையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சிவசேனாவுடன் கூட்டணி அமைப்பது குறித்து பாஜக இதுவரை ஆலோசனை நடத்தவில்லை. எனினும், மாநில மக்கள் நலனைக் கருத்தில்கொண்டு அவ்வாறு ஒரு சூழ்நிலை உருவானால், சிவசேனாவுடன் கூட்டணி ஏற்படுத்தி ஆட்சியமைக்க பாஜக தயாராக உள்ளது. இந்துத்துவா கொள்கையில் இரு கட்சிகளுமே ஒரே மாதிரியான சிந்தனையைக் கொண்டவை. எனவே, கூட்டணி அமைவதில் கொள்கை ரீதியாக எந்த சிக்கலும் எழாது. சிவசேனாவுடன் பாஜக கூட்டணி அமைத்தாலும் தேர்தலின்போது இரு கட்சிகளும் தனித்தனியாகவே போட்டியிடும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.