

காற்று மாசு அதிகரிப்பு காரணமாக இந்தியர்களின் சராசரி எதிர்பார்க்கப்படும் வாழ்நாள் 5.2 ஆண்டுகள் குறையும் என ஓர் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
‘நகர்ப்புறங்களில் கரோனா வைரஸ் பாதிப்பு’ என்ற பெயரில் ஒரு அறிக்கையை ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டார். அதில், “ஊரடங்கு காலத்தில் டெல்லியில் நைட்ரஜன் டை ஆக்ஸைடு அளவு 70 சதவீதத்துக்கும் அதிகமாக குறைந்துள்ளது. அதேநரேம் இது நிரந்தரமானது அல்ல. ஊரடங்கு முடிவுக்கு வரும்போது காற்று மாசை குறைக்கவும் கார்பன் டை ஆக்ஸைடு வெளியேற்றத்தை தடுக்கவும் நடவடிக்கை எடுக்காவிட்டால், மீன்டும் காற்று மாசு அதிகரிக்கும்” என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், யுனிவர்சிட்டி ஆப் சிகாகோவின் எரிசக்தி கொள்கை நிறுவனத்தால் (இபிஐசி) உருவாக்கப்பட்ட காற்று தர வாழ்வு குறியீடு (ஏக்யூஎல்ஐ) சமீபத்தில் ஒரு தரவை வெளியிட்டுள்ளது. காற்று மாசு துகள்கள் மனிதனின் எதிர்பார்க்கப்படும் சராசரி வாழ்நாள் மீது ஏற்படுத்தும் தாக்கத்தை இந்த தரவு மதிப்பிடுகிறது. இந்த தரவின்படி கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவில் காற்று மாசு 42 சதவீதம் அதிகரித்துள்ளது. கரோனா தாக்கத்துக்கு முன்பு காற்று மாசு மனிதர்களுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருந்தது.
எனவே, வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவில் இந்திய மக்கள் தொகையில் 25 சதவீதம் பேர் காற்று மாசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், இந்தியர்களின் சராசரி எதிர்பார்க்கப்படும் வாழ்நாள் 5.2 ஆண்டுகள் குறையும் என ஏக்யூஎல்ஐ தரவு தெரிவிக்கிறது.