Published : 30 Jul 2020 06:55 AM
Last Updated : 30 Jul 2020 06:55 AM

கரோனா ஊரடங்கு முடக்கத்தால் ரூ.40 ஆயிரம் கோடிக்கு மேல் ரயில்வே துறைக்கு இழப்பு

புதுடெல்லி

கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ரயில் சேவை நிறுத்தப்பட்டிருப்பதால் நடப்பு நிதி ஆண்டில் பயணிகள் சேவையில் ரூ.40 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் என ரயில்வே தெரிவித்துள்ளது.

ரயில்வே வாரியத்தின் தலைவர் வி.கே.யாதவ் இதுகுறித்து கூறியதாவது:

பயணிகள் ரயில்வே சேவை மிகச் சிறப்பாக இருந்து வந்தது. 230 ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஆனால் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பொதுப் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. ரயில்வே சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் வருவாய் 10 முதல் 15 சதவீதம் என்ற அளவில்தான் இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, நடப்பு நிதி ஆண்டில் ரூ.35 ஆயிரம் கோடி முதல் ரூ.40 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த இழப்பைசரி செய்ய சரக்கு போக்குவரத்து சேவையை அதிகரிக்க வேண்டிய நிலை உள்ளது. சரக்கு போக்குவரத்து இலக்கை முந்தைய ஆண்டின் மதிப்பில் 50 சதவீதத்தை கூடுதலாக எட்ட இலக்கு நிர்ணயித்துள்ளோம்.

இவ்வாறு வி.கே.யாதவ் கூறினார்.

ஜூலை 27-ம் தேதி 3.12 மில்லியன் டன் அளவுக்கு சரக்கு போக்குவரத்து நடைபெற்றுள்ளதாக ரயில்வே தெரிவித்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே நாளில்போக்குவரத்து செய்யப்பட்டதை விடவும் 0.01 சதவீதம் கூடுதலாகும்.

உணவுப் பொருள், உரம், பார்சல், இரும்பு உள்ளிட்டவற்றை ரயில்வே அதிகளவில் போக்குவரத்து செய்ய உள்ளது. இதனால் நிலக்கரி, சிமென்ட் போன்றவற்றைக் கடந்த ஆண்டை விடவும் குறைவாக போக்குவரத்து செய்கின்றனர். உணவுப் பொருட்கள் 80 சதவீதம் அதிகமாகவும், நிலக்கரி27 சதவீதமும், சிமென்ட் 24 சதவீதமும் குறைவாக போக்குவரத்து செய்யப்பட்டுள்ளது.

நடப்பு நிதிஆண்டில் இதுவரை 322 மில்லியன் டன் சரக்குப் போக்குவரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் இது கடந்த நிதி ஆண்டின் இதே கால கட்டத்தில் போக்குவரத்து செய்யப்பட்டதை விடவும் 19 சதவீதம் குறைவாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x