Published : 29 Jul 2020 08:50 PM
Last Updated : 29 Jul 2020 08:50 PM

எத்தகைய சவாலையும் முறியடிக்கும் திறன் வாய்ந்த ரஃபேல் போர் விமானங்கள்; நமது  யுக்தியை மாற்றும்: அமித் ஷா பெருமிதம்

புதுடெல்லி

ரஃபேல் போர் விமானங்கள் இந்திய மண்ணில் வந்திறங்கியிருப்பது, நமது யுக்தியை மாற்றியமைக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

இந்திய தேசியக் கொடி பறக்கவிடப்பட்ட ஐந்து ரஃபேல் போர் விமானங்கள் அம்பாலாவில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் வந்திறங்கிய பின் அமித் ஷா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘‘ரஃபேல் போர் விமானங்கள் வந்திறங்கிய தினம், பலமிக்க இந்திய விமானப் படைக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க தினம் என்பதோடு, இந்தியாவிற்கு பெருமிதம் அளிக்கக் கூடிய தருணம்“ என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒட்டுமொத்த நாட்டிற்கும் இது மிக முக்கியமான தருணம் என்று கூறியுள்ள மத்திய உள்துறை அமைச்சர் “அடுத்த தலைமுறையைச் சேர்ந்த இந்த விமானங்கள் இணைக்கப்பட்டிருபபது, இந்தியாவை வலிமைமிக்க மற்றும் பாதுகாப்பான நாடாக மாற்ற வேண்டுமென்ற பிரதமர் நரேந்திர மோடியின் உறுதிப்பாட்டிற்கு உண்மையான சாட்சியம். இந்திய ராணுவத்தின் திறனை அதிகரிக்க மோடி அரசு உறுதி பூண்டுள்ளது” என்றும் தெரிவித்துள்ளார்.

“இந்த விமானங்கள், வானில் ஏற்படக்கூடிய எத்தகைய சவாலையும் முறியடிக்கும் திறன்வாய்ந்த உலகின் சக்திமிக்க சாதனங்கள்” என்றும் மத்திய உள்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

பிரதமர் நரேந்திரமோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்திய விமானப்படை மற்றும் ஒட்டுமொத்த நாட்டிற்கும் பாராட்டு தெரிவித்துள்ள அமித் ஷா இந்திய விமானப் படைக்கு இதுவரை இல்லாத வல்லமையை அளித்துள்ளதற்காக பிரதமருக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.

‘‘பறந்து செல்லும் வேகம் முதல், ஆயுதங்களைச் சுமந்துசெல்லும் திறன் வரை, ரஃபேல் முன்னணியில் உள்ளது. ரஃபேல் போர் விமானங்கள் இந்திய மண்ணில் வந்திறங்கியிருப்பது, நமது யுக்தியை மாற்றியமைக்கும். உலகத்தரம் வாய்ந்த இந்த போர் விமானங்கள், நமது போர்த் திறனில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்” என்று அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.

“ரஃபேல் விமானங்கள் அதன் வலிமைமிக்க மேன்மை காரணமாக, நமது வான் மண்டலத்தைப் பாதுகாப்பதில், நமது விமானப்படை வீரர்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்” எனவும் அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x