

இந்திய விமானப்படையை வலுப்படுத்துவதற்காக பிரான்ஸிலிருந்து வாங்கப்பட்ட 36 ரஃபேல் போர் விமானங்களில் 5 விமானங்கள் 7 ஆயிரம் கி.மீ. பயணம் செய்து ஹரியாணாவின் அம்பாலா விமானப்படைத் தளத்தில் இன்று பிற்பகல் தரையிறங்கின. 5 விமானங்களுக்கும் தண்ணீர் பீய்ச்சி அடித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கடந்த 23 ஆண்டுகளுக்கு முன் ரஷ்யாவிலிருந்து சுகோய் 30 எம்கேஐ விமானம் வாங்கப்பட்டது. அதன்பின் வெளிநாடுகளில் இருந்து வாங்கப்பட்ட போர்விமானங்கள் இதுவாகும் என்பதால், பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.
பிரான்ஸின் டசால்ட் நிறுவனத்துடன் ரூ.59 ஆயிரம் கோடிக்கு 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு பிரான்ஸ் அரசுடன் கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23-ம் தேதி ஒப்பந்தம் செய்திருந்தது.
கடந்த மேமாதம் ரஃபேல் விமானங்கள் இந்தியா வந்திருக்க வேண்டும் ஆனால், கரோனா வைரஸ் காரணமாக 14 வாரங்கள் தாமதமாக இன்று வந்தன.
டாசல்ட் நிறுவனம் முதல்கட்டமாக 36 விமானங்களில் 10 விமானங்களை இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளன. இதில் 5 விமானங்கள் பிரான்ஸில் பயிற்சிக்காக வைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 5 விமானங்கள் திங்கள்கிழமை இந்தியா புறப்பட்டன.
பிரான்ஸின் துறைமுக நகரான போர்டாக்ஸில் உள்ள மெரிக்னாக் விமானப் படைத்தளத்திலிருந்து திங்கள்கிழமை புறப்பட்ட 5 ரஃபேல் போர் விமானங்களும் அன்று இரவே ஐக்கிய அரபு அமீரகத்தின் அல் தார்ஃபா விமானப்படைத்தளத்துக்கு வந்து சேர்ந்தன.
அங்கிருந்து இன்று காலை 11 மணி அளவில் புறப்பட்டு இந்திய நேரப்படி பிற்பகல் 3.25 மணிஅளவில் ஹரியாணாவின் அம்பாலா விமானப்படைத் தளத்துக்கு ரஃபேல் விமானங்கள் தரையிறங்கின.
இந்திய ரஃபேல் போர் விமானங்கள் பறந்து கொண்டிருந்த போது பிரான்ஸின் டேங்கர் விமானம் வானில் நடுவழியில் 30 ஆயிரம் அடி உயரத்தில் எரிபொருளை நிரப்பியது குறிப்பிடத்தக்கது.
இந்த 5 ரஃபேல் போர் விமானங்களில் 3 விமானங்கள் விமானி மட்டும் பயணிக்கும் வகையிலும், மற்ற இரு விமனங்கள் இருவர் பயணிக்கும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது.
5 ரஃபேல் போர் விமானங்களும் இந்திய வான் எல்லைக்குள் நுழைந்தவுடன், விமானப்படையின் நவீன சுகோய்-30 ரக இரு விமானங்கள் சென்று வானில் வரவேற்றன. அதன்பின் சுகோய்-30 விமானங்கள் பின்னால் பாதுகாப்புக்காக வர ரஃபேல் விமானங்கள் வந்து சேர்ந்தன.
இந்தியப் பகுதிக்குள் ரஃபேல் விமானங்கள் வந்த தரையிறங்கியவுடன் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ அம்பாலா விமானப்படைத் தளத்தில் பறவைகள் பாதுகாப்பாக தரையிறங்கின” எனத் தெரிவித்திருந்தார்.
அம்பாலா விமானப்படைத் தளத்தில் அதிவேகமாக ரஃபேல் போர் விமானங்கள் ஒன்றன் பின் ஒன்றாக சிறிய இடைவெளி விட்டு தரையிறங்கின. விமானம் தரையிறங்குவதால், விமானப்படைத் தளத்தை சுற்றி இருக்கும் கிராம மக்கள் விமானங்களை புகைப்பட எடுக்கவும், ட்ரோன்களை பறக்கவிடவும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
விமானப்படைத் தளத்தில் ரஃபேல் விமானங்கள் தரையிறங்கியுடன் அங்கு தண்ணீரைப் பீய்ச்சி அடித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
விமானப்படையில் போர்விமானங்கள் எண்ணிக்கை 31 ஆக திடீரெனக் குறைந்தது. குறைந்தபட்சம் 42 விமானங்களாவது இருக்க வேண்டும் என்பதால், பாஜக தலைமையிலான மத்தியஅரசு அதிநவீன ரஃபேல் போர் விமனங்களை வாங்க முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
அதிநவீன ரஃபேல் விமானங்கள் , ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்பட்ட சுகோய் விமானங்களைவிட அதிநவீனமானவே. ஐரோப்பிய ஆயுதம் தயாரிக்கும் மீட்டோர் நிறுவனத்தின் அதிநவீன கருவிகள் ரஃபேல் விமானத்தில் பொருத்தப்பட்டுள்ளன. ஒரே நேரத்தில் 8 இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்க முடியும்.
பிரான்ஸ் ராணுவத்துக்காக வடிவமைக்கப்பட்ட ஹேமர் தொழில்நுட்பம் இந்த ரஃபேல் விமானத்தில் பொறுத்தப்பட்டுள்ளது. மீட்டோர் எனச் சொல்லப்படும் அடுத்த தலைமுறைக்கான தொழில்நுட்பத்தின் மூலம் வானில் இருந்தவாறே ஏவுகணைச் செலுத்த முடியும்.
இதுதவிர அதிநவீன ராடார் வசதிகள், எதிரிநாட்டு ராடாரில் சிக்காமல் தப்பிக்கும் வசதிகள், இஸ்ரேல் தொழில்நுட்பத்தில் விமானிகளுக்கு ஹெல்மெட்டில் பொருத்தப்பட்ட கேமிராக்கள் என ஏராளமான பாதுகாப்பு, நவீன அம்சங்கள் உள்ளன.