Published : 29 Jul 2020 04:34 PM
Last Updated : 29 Jul 2020 04:34 PM

ஆன்லைன் மூலம் ஏன் நீட் தேர்வை நடத்தக்கூடாது?- மத்திய அரசு, இந்திய மருத்துவக் கவுன்சில் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள மாணவர்களின் எதிர்காலத்தைக் கணக்கில் கொண்டு நீட் தேர்வு மையங்களை ஏற்படுத்த வேண்டும் அல்லது கரோனா சூழல் சரியாகும் வரை நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரப்பட்ட வழக்கில் ஆன்லைனில் ஏன் நீட் தேர்வை நடத்தக்கூடாது என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி, பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும் இந்திய மாணவர்களுக்கு நீட் தேர்வு எழுதுவதற்கான மையம் ஏற்படுத்த வேண்டும் அல்லது நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் எனக் கோரி கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த அப்துல் அசிஸ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், ''மத்திய கிழக்கு நாடுகளில் லட்சக்கணக்கான இந்தியர்கள் வசித்து வருகின்றனர். இதில் சுமார் 4,000 மாணவர்கள் மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வுக்குத் தயாராகியுள்ளனர். ஆனால், கரோனா தொற்று காரணமாக தற்போது உலகம் முழுவதும் முடக்கமான சூழல் நிலவி வருகிறது. மேலும், இந்த அசாதாரணச் சூழல் எப்போது முடிவுக்கு வரும் என்றும் கூற இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு வைத்தால் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அம்மாணவர்கள் இந்தியா வந்து நீட் தேர்வு எழுத முடியாத நிலை உள்ளது. எனவே மத்திய கிழக்கு நாடுகளில் நீட் தேர்வுக்கான மையம் ஏற்படுத்த வேண்டும் அல்லது நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும்'' எனக் கோரியிருந்தார்.

இந்த மனுக்கள் உச்ச நீதிமன்ற நீதிபதி எல். நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் பல்லவி பிரதாப் வாதத்தில், “மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள மாணவர்களின் எதிர்காலத்தைக் கணக்கில் கொண்டு நீட் தேர்வு மையங்களை ஏற்படுத்த வேண்டும் அல்லது கரோனா சூழல் சரியாகும் வரை நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ஆன்லைன் மூலம் ஏன் நீட் தேர்வை நடத்தக்கூடாது? என மருத்துவக் கவுன்சிலுக்கு கேள்வி எழுப்பியதுடன், மேலும் இந்த மனு தொடர்பாக பதிலளிக்க, மத்திய அரசு, இந்திய மருத்துவக் கவுன்சில், தேசிய தேர்வுகள் முகமை உள்ளிட்ட எதிர்மனுதாரர்களுக்கு உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x