Last Updated : 29 Jul, 2020 03:36 PM

 

Published : 29 Jul 2020 03:36 PM
Last Updated : 29 Jul 2020 03:36 PM

கேரளாவில் கொட்டித்தீர்க்கும் கனமழை; 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு 

கொச்சி நகர சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடிய காட்சி: படம் | ஏஎன்ஐ.

திருவனந்தபுரம்

கேரள மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவிலிருந்து இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை புகுந்துள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

குறிப்பாக கொச்சின், எர்ணாகுளம், கோட்டயம், மலப்புரம், வயநாடு, பத்தனம்திட்டா உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கனமழை பெய்துவருகிறது. இன்று காலை முதல் இடைவெளிவிட்டு கனமழை பெய்துவருவதால், மக்கள் வீட்டுக்குள் முடங்கியுள்ளனர்.

கேரளாவில் உள்ள 12 மாவட்டங்களுக்கு அடுத்த இரு நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்து இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொச்சி நகரில் வாகனங்கள் மழை நீரில் ஊர்ந்து சென்ற காட்சி : படம் | ஏஎன்ஐ.

கேரளாவில் தென்மேற்குப் பருவமழை ஜூன் 1-ம் தேதி தொடங்கியது. இருப்பினும் கடந்த ஆண்டைப் போல் இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவுக்கு கேரளாவில் தென்மேற்குப் பருவமழை வலுவாகப் பெய்யவில்லை. பிஹார், அசாம், மகாராஷ்டிரா போன்ற வடமாநிலங்களில்தான் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் கேரளாவில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கொச்சின், எர்ணாகுளம் பகுதியில் மக்கள் வெளியே நடமுடியாத வகையில் கனமழை பெய்தது. சாலையில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியதால், மக்கள் வெளியே செல்ல முடியாத நிலையிலும், இருசக்கர வாகனத்தில் செல்வோர், காரில் செல்வோர் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர்.

கொச்சி நகரில் ஜோஸ் ஜங்ஷன், எம்.ஜி. சாலை, பனம்பள்ளி நகர் போன்ற பகுதிகளை மழை நீர் சூழ்ந்துள்ளது. தாழ்வான பகுதிகளில் குடியிருக்கும் வீடுகளில் மழை நீர் புகுந்தது. காலையிலிருந்து கனமழை தொடர்ந்து பெய்ததால், அரசுப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

கோட்டயம் , சிங்காவனம் பகுதியில் ரயில் பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டதால், கோட்டயம், எர்ணாகுளம் இடையிலான ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

திருவனந்தபுரத்திலிருந்து செல்லும் வேநாடு சிறப்பு ரயில் சங்கசனாச்சேரியுடன் நிறுத்தப்பட்டது. திருவனந்தபுரம் கண்ணூர் இடையே கோட்டயம் வழியாகச் செல்லும் ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில், கனமழை காரணமாக ஆலப்புழா வழியாகத் திருப்பிவிடப்பட்டது.

காலை 8.30 மணி நிலவரப்படி கோட்டயத்தில் 19.76 மி.மீ., வைக்கத்தில் 19.1 மி.மீ., கொச்சி விமான நிலையத்தில் 15.42 மி.மீ., திருவனந்தபுரத்தில் 4.82 மி.மீ. மழை பதிவானது. கடலில் காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசுவதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களுக்கு கனமழை முதல் மிகக்கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது.

குறிப்பாக கொல்லம், திருவனந்தபுரம், பத்தனம்திட்டமா, இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, ஆலப்புழா, கோட்டயம், திருச்சூர், எர்ணாகுளம், பாலக்காடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களி்ல கனமழை முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும். காலநிலை மிகவும் மோசமாக இருக்கும் என்பதால், முன்னெச்சரிக்கைப் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x