Last Updated : 29 Jul, 2020 02:16 PM

 

Published : 29 Jul 2020 02:16 PM
Last Updated : 29 Jul 2020 02:16 PM

சரியான நேரத்தில் காய்நகர்த்தும் மாயாவதி: ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏக்கள் கட்சியை காங்கிரஸில் இணைத்ததை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு

ராஜஸ்தான் மாநிலத்தில் பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏக்கள் 6 பேர் தங்கள் கட்சியைக் காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டதற்கு எதிராக பிஎஸ்பி கட்சியின் தலைவர் மாயாவதி தரப்பில் ஜெய்ப்பூர் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ராஜஸ்தானில் கடந்த 2018-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிட்டு சந்தீப் யாதவ், வாஜிப் அலி, தீப்சந்த் கேரியா, லகான் மீனா, ஜோகிந்திரா அவானா, ராஜேந்திர குதா ஆகியோர் வெற்றி பெற்று எம்எல்ஏக்கள் ஆயினர்.

ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க முடியாத சூழல் ஏற்பட்டபோது, மாயாவதி, சமாஜ்வாதி கட்சி ஆதரவால் காங்கிரஸ் கட்சி அமைந்தது. ஆனால், சில மாதங்களிலேயே காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்களை தங்களின் பக்கம் இழுத்துக்கொண்டது.

கடந்த ஆண்டு செப்டம்பர் 16-ம் தேதி பிஎஸ்பி கட்சியின் 6 எம்எல்ஏக்களும் தங்களைக் காங்கிரஸில் இணைத்துக்கொண்டனர். இவர்கள் காங்கிரஸில் சேர்ந்த இரு நாட்களுக்குப் பின், 6 எம்எல்ஏக்களும் காங்கிரஸ் எம்எல்ஏக்களாகவே கருதப்படுவார்கள் எனப் பேரவைத் தலைவர் அறிவித்தார். இதனால் காங்கிரஸின் பலம் பேரவையில் 101-ல் இருந்து 107 ஆக அதிகரித்தது.

காங்கிரஸ் கட்சியின் இந்தச் செயலுக்கு அப்போது பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி அப்போது கடும் கண்டனம் தெரிவித்தார்.

இப்போது ராஜஸ்தானில் பெரும் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தானில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் முதல்வராக இருக்கும் அசோக் கெலாட்டுக்கும், துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட்டுக்கும் இடையே அதிகார மோதல் ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ் கூட்டங்களில் சச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்எல்ஏக்கள் கலந்துகொள்ளாததால், சச்சின் பைலட்டின் துணை முதல்வர் பதவி பறிக்கப்பட்டது. மேலும், அவரையும், ஆதரவு எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக மாநில சட்டப்பேரவைத் தலைவர் சி.பி. ஜோஷி நோட்டீஸும் வழங்கினார்.

இதற்கு எதிராக ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் சச்சின் பைலட் சார்பில் தொடர்ந்த வழக்கில், சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் மீது சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

இதையடுத்து, சட்டப்பேரவையைக் கூட்டி தனது பெரும்பான்மையை நிரூபிக்க முடிவு செய்த முதல்வர் அசோக் கெலாட், ஆளுநரிடம் பேரவையைக் கூட்ட இருமுறை அரசு சார்பில் கடிதம் அளித்தும் அது நிராகரிக்கப்பட்டது. தனக்கு 107 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதை மனதில் வைத்து கெலாட் செயல்பட்டு வருகிறார்.

ஆனால், இந்த நேரத்தில்தான் தனது காய் நகர்த்தும் பணியைச் சாதுர்யமாக மாயாவதி செய்யத் தொடங்கியுள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் பொதுச்செயலாளரும் கொறடாவுமான சந்திர மிஸ்ரா கடந்த ஞாயிற்றுக்கழமை பிறப்பித்த உத்தரவில், “பகுஜன் சமாஜ் எம்எல்ஏக்கள் அனைவரும் காங்கிரஸில் இணைவதற்குச் சாத்தியமில்லை. ஆதலால், நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும்போது ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும். இல்லாவிட்டால் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என உத்தரவிட்டார்

இந்தச் சூழலில் காங்கிரஸ் கட்சியில் பகுஜன் சமாஜ் கட்சியை இணைக்கச் சட்டத்தில் இடமில்லை எனக் கூறி, பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ஜெய்ப்பூர் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


இதுகுறித்து பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் பகவான் சிங் பாபா கூறுகையில், “பகுஜன் சமாஜ் கட்சி என்பது தேசியக் கட்சி. அரசியலமைப்புச் சட்டம் 10-வது பட்டியலில், 4-வது பத்தியின்படி, எந்த மாநிலக் கட்சியுடனும் தேசியக் கட்சியை இணைக்க முடியாது. ஆதலால், 6 எம்எல்ஏக்களும் இன்னும் பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏக்கள்தான்.

எங்கள் கட்சியின் எம்எல்ஏக்கள் காங்கிரஸில் சேர்ந்ததாக சபாநாயகர் அறிவித்தது தவறாகும். அதை ரத்து செய்யக்கோரி மனுத்தாக்கல் செய்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே பாஜக எம்எல்ஏ மதன் தில்வாரும், பிஎஸ்பி எம்எல்ஏக்களை காங்கிரஸில் இணைத்தமைக்கு ஒப்புதல் அளித்த சபாநாயகர் உத்தரவை ரத்து செய்யக்கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இதனால் தற்போது அசோக் கெலாட்தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு பாஜக, பகுஜன் சமாஜ் தரப்பில் நெருக்கடி கொடுக்கப்பட்டுள்ளது. தன்னுடைய கட்சி எம்எல்ஏக்களைத் தனது பக்கம் இழுத்துக்கொண்ட காங்கிரஸ் கட்சிக்கு தகுந்த நேரத்தில் நெருக்கடி கொடுக்க மாயாவதி தரப்பு அரசியல் காய்களை நகர்த்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x