

வங்கி அமைப்பு முறையைச் சீரமைக்க முயன்றதால் மத்திய அரசுடன் ஏற்பட்ட மோதலில் ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் உர்ஜித் படேல் தனது பதவியை இழந்தார் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மத்திய அரசை விமர்சித்துள்ளார்.
ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம்ராஜன் பதவிக்காலம் முடிந்தபின் கவர்னராக வந்தவர் உர்ஜித் படேல். குறுகிய காலமே பதவியில் இருந்த உர்ஜித் படேல், தனிப்பட்ட காரணங்களால் கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் உர்ஜித் படேல் சமீபத்தில் “ஓவர் டிராஃப்ட்: சேவிங் தி இன்டியன் சேவர்” எனும் நூல் எழுதியுள்ளார். அந்தப் புத்தகம் குறித்து ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை கவர்னர் விரால் ஆச்சார்யா சமீபத்தில் ஒரு நாளேட்டுக்கு அளித்த பேட்டியில், “ திவால் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் விதத்தில் மத்திய அரசு செயல்பட்டதால் அப்போது ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்த உர்ஜித் படேலுக்கும் , மத்திய அரசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மத்திய அரசு செய்ய இருந்த திருத்தங்களுக்கு உர்ஜித் படேல் சம்மதிக்கவில்லை. இதனால் அவர் பதவியிருந்து விலக நேர்ந்தது” எனத் தெரிவித்திருந்தார்.
அந்த நாளேட்டின் செய்தி தொடர்பான இணைப்பை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது ட்விட்டரில் பதிவிட்டு, மத்திய அரசை விமர்சித்துள்ளார். அவர் பதிவிட்ட கருத்தில், “ வங்கி முறையைச் சீரமைக்க முயன்றதற்கு உர்ஜித் படேல் தனது பதவியை இழக்க நேர்ந்தது. ஏன் தெரியுமா, வங்கியில் கடன் பெற்று வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாமல் இருப்பவர்களைப் பின்தொடர்ந்து பெற பிரதமர் விரும்பவில்லை” எனத் தெரிவித்திருந்தார்.
ராகுல் காந்தியின் கருத்துக்கு பாஜக சார்பில் பதிலடி தரப்பட்டது. பாஜக தகவல் தொடர்பு பொறுப்பாளர் அமித் மாளவியா ராகுல் காந்தியின் ட்விட்டர் பதிவை டேக் செய்து பதிவிட்ட கருத்தில், “பரபரப்பாக ஏதாவது ஒருவரியில் எழுதுவதால் நீங்கள் பொருளாதார வல்லுநர் ஆகிவிட முடியாது. ராகுல் காந்தியின் ஆலோசகர்கள் அவரைப் போலவே திறமையாக இருக்கிறார்கள் என்பதில் சிறிது சந்தேகம் இருக்கிறது” எனத் தெரிவித்தார்.
கரோனா வைரஸ் லாக்டவுனால் வேலையிழந்தவர்கள், தங்களின் இபிஎஃப் பணத்தைப் பயன்படுத்தி வாழ்கிறார்கள் என்று இந்தியில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இதைக் குறிப்பிட்டு ராகுல் காந்தி ட்விட்டரில் கருத்துப் பதிவிட்டார்.
அதில் அவர் கூறுகையில், “ வேலைவாய்ப்புப் பறிக்கப்பட்டும், சேமிப்பு அபகரிக்கப்பட்டும், கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க முடியவில்லை. ஆனால், உயர்ந்த பொய்யான கனவுகளைத் தொடர்ந்து வெளிப்படுத்துகிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில் இணைத்துள்ள செய்தியில், “ இபிஎஃப் கணக்கிலிருந்து ரூ.30 ஆயிரம் கோடியைக் கடந்த 4 மாதத்தில் மக்கள் திரும்பப் பெற்றுள்ளார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.