

மருத்துவர்கள் அறுவை சிகிச்சையின் போது அணியும் முகக்கவசம், மருத்துவத்துறையில் பயன்படும் மூக்குக்கண்ணாடி, பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட முகக்கவசம்(ஃபேஸ் ஷீல்ட்) ஆகியவற்றை ஏற்றுமதி செய்ய விதிகளைத் தளர்த்தியது மத்திய அரசு.
கரோனா வைரஸ் காலத்தில் இந்த பொருட்களுக்கு தேவை அதிகரித்துவரும் நிலையில் இவற்றை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதித்துள்ளது. ஏற்கெனவே கரோனா வைரஸலிருந்து காக்கப் பயன்படும் என்95 முகக்கவசம், சானிடைசர் போன்றவற்றை அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் இருந்து நீக்கியது மத்திய அரசு என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஃபேஸ் ஷீல்ட், அறுவை சிகிச்சையின் போது மருத்துவர்கள் அணியும் முகக்கவசம், மூக்குக்கண்ணாடி போன்றவற்றை சில விதிமுறைகளுக்கு உட்பட்டு ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.
தற்போது விதிமுறை தளர்த்தப்பட்டுள்ள முகக்கவசம் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களும் கரோனா காலத்தில் தடை செய்யப்பட்டிருந்தது. இந்த பொருட்களை ஏற்றுமதி செய்யும் முன் வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகத்தில் ஏற்றுமதியாளர் அனுமதி பெற வேண்டும், ஆனால், இப்போது அந்த தடை நீக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் வெளியிட்ட அறிவிப்பில் “ 2/3 அறுவை சிகிச்சை முகக்கவசம், மருத்துவத்துறையில் பயன்படும் மூக்குக்கண்ணாடி, ஃபேஸ் ஷீல்ட் போன்றவற்றை ஏற்றுமதி செய்ய தடைவிதிக்கப்பட்ட நிலையில் அந்த தடை நீக்கப்பட்டுள்ளது. மாதத்துக்கு 4 கோடி முகக்கவசங்கள், 20 லட்சம் மருத்துவக் கண்ணாடி, ஃபேஸ்ஷீல்ட்களை ஏற்றுமதியாளர் ஏற்றுமதி செய்யலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.