

பெங்களூருவில் நோயாளிகளிடம் தனியார் மருத்துவமனைகள் கூடுதலாக வசூலித்த ரூ. 24.80 லட்சத்தை ஐபிஎஸ் அதிகாரி ரூபா ஐபிஎஸ் திரும்ப பெற்று தந்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் தனியார் மருத்துவமனைகள் கரோனா நோயாளிகளுக்கு படுக்கைகள் ஒதுக்க மறுப்பதாகவும், கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து முதல்வர் எடியூரப்பா ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் தலைமையில் மண்டல வாரியாக கண்காணிப்பு குழுக்களை நியமித்துள்ளார்.
பெங்களூரு ஆர்ஆர் நகர் மண்டல கண்காணிப்பு அதிகாரியாக ரூபா ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த இரு தினங்களாக அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைகளை பார்வையிட்டு, நோயாளிகளுக்கு 50 சதவீத படுக்கைகள் அளிக்கப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்தார். மேலும் கரோனா நோயாளிகளிடம் வசூலிக்கப்பட்ட கட்டணம் தொடர்பான பதிவேடுகளையும் ஆராய்ந்தார்.
இதுகுறித்து ரூபா கூறும்போது, "ராஜராஜேஷ்வரி நகரில் உள்ள எஸ்எஸ்எம்என்சி மருத்துவமனையின் கட்டண பதிவேட்டை ஆராய்ந்த போது 22 கரோனா நோயாளிகளிடம் சிகிச்சைக்கு முன் பணமாக ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.3.05 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டு இருந்தது.
இது கர்நாடக அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகமாக இருந்தது. இதையடுத்து கூடுதலாக வசூலித்த ரூ.24.80 லட்சம் கட்டணத்தை நோயாளிகளுக்கு திரும்ப பெற்றுத் தரப்பட்டது’’ என்றார்.