

மேற்கு வங்கத்தில் வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். அதேநேரம் வாரத்தில் 2 நாள் மட்டும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. அங்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 31-ம் தேதி வரை அமலில் உள்ளது. இந்நிலையில், முதல்வர் மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
தற்போது அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் வாரத்தில் 2 நாட்கள் மட்டும் முழு ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்படும். அதாவது ஆகஸ்ட் 2, 5, 8, 9, 16, 17, 23, 24, 31 ஆகிய தேதிகளில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும். வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட இருப்பதால் அன்று ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட மாட்டாது.
பள்ளி, கல்லூரிகள் தொடர்ந்து மூடியே இருக்கும். பள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து செப்டம்பரில் ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்படும். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் முழு ஊரடங்கு அமலில் இருக்கும். ஆகஸ்ட் மாதத்தில் சுதந்திர தினம், பக்ரீத் பண்டிகைகள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வருகிறது. எனவே அன்றைய தினங்களில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்காது.
இவ்வாறு முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார்.