Published : 29 Jul 2020 08:20 AM
Last Updated : 29 Jul 2020 08:20 AM

ஜூலை 31-ல் சட்டப்பேரவையை ஆளுநர் கூட்டுவார்: ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் நம்பிக்கை

ஜெய்ப்பூர்

ராஜஸ்தானில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்துக்கு இடையே வரும் 31-ம் தேதி சட்டப் பேரவையை ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா கூட்டுவார் என்று முதல்வர் அசோக் கெலாட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் அரசியலில் குழப்பம் நிலவுகிறது. இந்நிலையில் சட்டப் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க விரும்பும் முதல்வர் அசோக் கெலாட், ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவை சந்தித்து, சட்டப் பேரவையைக் கூட்டுமாறு கேட்டுக் கொண்டார். முதல் முறை அனுப்பிய கோரிக்கையை ஆளுநர் நிராகரித்ததைத் தொடர்ந்து சட்டப் பேரவையைக் கூட்டுமாறு 2-வது முறையாக அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.

இந்நிலையில், 3 நிபந்தனைகளுடன் சட்டப்பேரவையை கூட்டத் தயார் என்று ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா அறிவித்துள்ளார்.

இதனிடையே முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் அவரது இல்லத்தில் அவசர அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்துக்குப் பின்னர் மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரதாப் சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஆளுநருடன் எந்த மோதல் போக்கையும் ராஜஸ்தான் அரசு விரும்பவில்லை. இந்த அவையின் தலைவர் அவர்தான். அமைச்சரவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஆளுநர் மறுக்கக்கூடாது என்று அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. எனவே அரசியலமைப்புச் சட்டத்துக்கு ஆளுநர் மரியாதை கொடுப்பார் என்று நம்புகிறோம். எனவே, எங்கள் கோரிக்கையின்படி வரும் 31-ம் தேதி சட்டப்பேரவைக் கூட்டத்தை ஆளுநர் கூட்டுவார் என முதல்வர் அசோக் கெலாட் நம்புகிறார். அதுதான் நடக்கும் என்று நாங்களும் எதிர்பார்க்கிறோம். ஆளுநர் கூறியுள்ள நிபந்தனைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி கூறும்போது, “2014-ம் ஆண்டில் செப்டம்பர் 7-ம் தேதி நோட்டீஸ் கொடுக்கப்பட்டு, செப்டம்பர் 15-ம் தேதியே ராஜஸ்தான் சட்டப்பேரவைக் கூட்டப்பட்டது. அதுபோல குறுகிய காலங்களில் பேரவைக் கூட்டப்பட்டதற்கான முன்னுதாரணங்கள் இருக்கின்றன” என்றார்.

பாடம் கற்பிக்க காத்திருக்கிறோம்

இதுகுறித்து பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி நேற்று கூறியதாவது:

ராஜஸ்தான் தேர்தலுக்குப் பிறகு பகுஜன் சமாஜ் கட்சி தனது 6 எல்எல்ஏக்களின் ஆதரவை காங்கிரஸ் கட்சிக்கு நிபந்தனையின்றி வழங்கியது. ஆனால் முதல்வர் அசோக் கெலாட் அவர்களை காங்கிரஸ் கட்சியுடன் இணைத்துக் கொண்டார். அவர் தனது முந்தையை ஆட்சியிலும் இவ்வாறு செய்துள்ளார். எனவே, காங்கிரஸ் கட்சிக்கும் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும் பாடம் கற்பிக்க சரியான நேரத்துக்காக காத்திருக்கிறோம். இந்த விஷயத்தை நாங்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்ள மாட்டோம். உச்ச நீதிமன்றம் வரை செல்வோம்.

ராஜஸ்தான் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால் காங்கிரஸ் அரசுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என 6 எம்எல்ஏக்களுக்கும் உத்தரவிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x