Last Updated : 29 Jul, 2020 08:06 AM

 

Published : 29 Jul 2020 08:06 AM
Last Updated : 29 Jul 2020 08:06 AM

செல்போனில் விளையாடும் குழந்தைகளை கண்காணிக்க வேண்டும்; இணையதள சூதாட்டத்தில் ஒருவர்கூட ஜெயிக்க முடியாது: முன்னாள் காவல் துறை அதிகாரி கலியமூர்த்தி தகவல்

சென்னை

இணையதள சூதாட்டத்தில் ஒருவர் கூட ஜெயிக்க முடியாது என்று ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

சென்னை டிபி சத்திரம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் நிதிஷ்குமார் (20), காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். டாட்டூ போடும் தொழிலை பகுதி நேரமாகவும் செய்து வந்துள்ளார். சென்னை அமைந்தகரையில் உள்ளதனியார் டாட்டூ நிலையம் ஒன்றில் பணியாற்றியுள்ளார். நேற்று முன் தினம் தான் பணி செய்த கடைக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இணையதளம் மூலம் சூதாடி பணம் சம்பாதிக்க நினைத்த நிதிஷ்குமார், பகுதிநேர வேலை பார்த்து சம்பாதித்த அனைத்து பணத்தையும் தோற்றதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக போலீஸார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரி கலியமூர்த்தி கூறியதாவது:

தங்கள் பிள்ளைகள் செல்போனில் எவ்வளவு நேரம் செலவு செய்கின்றனர் என்பது பெற்றோருக்கு தெரிவதில்லை. நிஜ உலக ஆபத்தில் இருந்து பிள்ளைகளை காப்பாற்ற பெற்றோர் என்ன முயற்சி எல்லாம் எடுக்கிறார்களோ, அதேபோல செல்போன் மூலம் வரும் நிழல்உலக ஆபத்தில் இருந்தும் பிள்ளைகளை காப்பாற்ற வேண்டிய முயற்சிகளை பெற்றோர் எடுத்தாக வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்.

இணையதளம் மூலம் விளையாடப்படும் சூதாட்டத்தில் பொதுமக்களில் ஒருவர்கூட ஜெயிக்க முடியாது. அப்படி ஜெயித்ததாக கூறுபவர் அந்த சூதாட்ட நிறுவனத்தைச் சேர்ந்த நபராகவே இருப்பார். இணையதள சூதாட்டத்தில் பங்கேற்கும் மக்களுக்கு இது புரிவதில்லை. இணையதள சூதாட்டத்தில் பணத்தை இழந்தவர்கள், தற்கொலை செய்தவர்கள் என பல உதாரணங்களை சொல்ல முடியும்.

இணையதள சூதாட்டத்தில் ஜெயித்து வாழ்வில் முன்னேறிவிட்டேன் என்று ஒருவரைக்கூட உதாரணமாக சொல்ல முடியாது. இணையதள சூதாட்டத்தில் நாம் ஜெயிக்க முடியாது என்பதுதான் உண்மை. நமது செல்போனில் நாம் பார்க்கும் விஷயங்கள் நமக்கு மட்டுமே தெரியும் என்று நினைப்பது முதல் தவறு. செல்போனுக்குள் இருந்துகொண்டு ஆயிரம் கண்கள் நாம் சூதாடுவதை பார்த்துக் கொண்டு இருக்கும். செல்போனில் அதிக நேரம் செலவு செய்யும் பிள்ளையை கண்காணிக்க வேண்டியது பெற்றோரின் கடமை. செல்போனில் ஒளிரும் வெளிச்சத்தால் நிறைய குடும்பங்கள் இருளில் மூழ்கிக் கொண்டு இருக்கின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

கல்லூரி படிப்புடன் கைத்தொழிலும் தெரிந்த 20 வயதே ஆன இளைஞன், இணையதள சூதாட்டத்தில் சிக்கி, அதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்டது அவரது நண்பர்கள், உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இணையதள சூதாட்டம் மற்றும் விளையாட்டுகளை தடை செய்யவேண்டும் என்ற வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ளது.

இணையதள சூதாட்டமும், விளையாட்டும் கரோனா காலத்திலும் மக்களிடம் இருக்கும் சிறிய பணத்தையும் சுரண்டி அவர்களை கடன்காரர்களாக்கி அதீத மன அழுத்தத்தை கொடுக்கிறது. எனவே, இளைஞர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x