

இந்தியாவுக்கு இன்று வரும் 5 ரஃபேல் போர் விமானங்களுக்கு வானில் நடுவழியில் 30 ஆயிரம் அடி உயரத்தில் பிரான்ஸ் நாட்டின் டேங்கர் விமானம் எரிபொருள் நிரப்பியுள்ளது. அந்தப் புகைப்படங்களை இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ளது.
பிரான்ஸின் டசால்ட் நிறுவனத்துடன் ரூ.59 ஆயிரம் கோடிக்கு 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு பிரான்ஸ் அரசுடன் கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23-ம் தேதி ஒப்பந்தம் செய்திருந்தது.
இதன்படி முதல்கட்டமாக 5 ரஃபேல் போர் விமானங்கள் இன்று பிற்பகல் 2 மணி அளவில் ஹரியாணாவின் அம்பாலா விமானப்படைத் தளத்தில் தரையிறங்குகின்றன.
ரஃபேல் போர் விமானங்களை விமானப்படைத் தளபதி ஆர்கேஎஸ் பகதூரியா வரவேற்று, படையில் சேர்க்கிறார்.
இந்த 5 ரஃபேல் போர் விமானங்களில் 3 விமானங்கள் விமான மட்டும் பயணிக்கும் வகையிலும், மற்ற இரு விமனங்கள் இருவர் பயணிக்கும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்திய விமானப்படையின் நம்பர்-17 ஸ்குவார்டன் படைப்பிரிவில் அதாவது கோல்டன் ஆரோஸ் எனும் பிரிவில் ரஃபேல் போர் விமானங்கள் சேர்க்கப்பட உள்ளன.
பிரான்ஸின் துறைமுக நகரான போர்டாக்ஸில் உள்ள மெரிக்னாக் விமானப் படைத்தளத்திலிருந்து திங்கள்கிழமை புறப்பட்ட 5 ரஃபேல் போர் விமானங்களும் ஏறக்குறைய 7 ஆயிரம் கி.மீ பயணம் செய்து இந்தியாவை வந்தடைகின்றன.
பல ஆயிரம் கி.மீ பறந்து வந்த 5 ரஃபேல் போர் விமானங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தின் அல் தார்ஃபா விமானப்படைத்தளத்துக்கு திங்கள்கிழமை இரவு வந்து சேர்ந்தன.
அங்கிருந்து இன்று காலை 11 மணி அளவில் புறப்பட்டு இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணி முதல் 3 மணிக்குள் ஹரியாணாவின் அம்பாலா விமானப்படைத் தளத்துக்கு ரஃபேல் விமானங்கள் வந்து சேர்கின்றன.
இந்திய ரஃபேல் போர் விமானங்கள் பறந்து கொண்டிருந்த போது பிரான்ஸின் டேங்கர் விமானம் வானில் நடுவழியில் 30 ஆயிரம் அடி உயரத்தில் எரிபொருளை நிரப்பியுள்ளன. அந்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து இந்தியத்தூதரகம் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் “ 30 ஆயிரம் அடி உயரத்திலிருந்து சில புகைப்படங்கள். இந்தியா செல்லும் ரஃபேல் போர் விமானங்களுக்கு பிரான்ஸ் ராணுவத்தின் விமானம் எரிபொருள் நிரப்பும் காட்சி” எனத் தெரிவித்துள்ளது.
மேலும், இந்திய விமானப்படை பதிவிட்ட ட்விட்டர் கருத்தில் “ இந்தியா வரும் நம்முடைய ரஃபேல் போர் விமானங்களுக்கு வானில் நடுவழியில் எரிபொருள் நிரப்பிய பிரான்ஸ் விமானப்படையின் செயலைப் பாராட்டுகிறோம்” எனத் தெரிவித்துள்ளது.
இந்தியா வாங்கியுள்ள 36 ரஃபேல் போர் விமானங்களில் 30 விமானங்கள் போர் விமானங்கள், 6 விமானங்கள் இரு இருக்கை கொண்ட பயிற்சி விமானங்களாகும். போர்விமானங்களில் இருக்கும் அனைத்து அம்சங்களும் பயிற்சி விமானங்களிலும் இருக்கின்றன.