Last Updated : 29 Jul, 2020 07:36 AM

 

Published : 29 Jul 2020 07:36 AM
Last Updated : 29 Jul 2020 07:36 AM

5 ரஃபேல் போர் விமானங்கள் ஹரியாணா அம்பாலா விமானப்படை தளத்துக்கு இன்று வருகை: தளபதி பகதூரியா வரவேற்கிறார்;புகைப்படம் எடுக்கத் தடை

கோப்புப்படம்

புதுடெல்லி


பிரான்ஸின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து ரூ.59 ஆயிரம் கோடி மதிப்பில் வாங்கப்பட்ட ரஃபேல் போர் விமானங்களில் 5 விமானங்கள் இன்று பிற்பகல் ஹரியாணா மாநிலம், அம்பாலா விமானப்படைத் தளத்துக்கு வந்து சேர்கின்றன.

விமானப்படைத் தளபதி ஆர்கேஎஸ் பகதூரியா ரஃபேல் போர் விமானங்களை வரவேற்று, படையில் சேர்க்கிறார். ஆனால், முறைப்படி விமானப்படையில் சேர்க்கும் நிகழ்ச்சி பின்னர் அறிவிக்கப்படும்.

பிரான்ஸின் டசால்ட் நிறுவனத்துடன் ரூ.59 ஆயிரம் கோடிக்கு 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு பிரான்ஸ் அரசுடன் கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23-ம் தேதி ஒப்பந்தம் செய்திருந்தது. இந்த ஒப்பந்தம் நிறைவேறுவதற்கு விமானப்படைத் தளபதி ஆகேஎஸ் பகதூரியா முக்கியக் காரணமாக இருந்தார்.

ஏறக்குறைய 4 ஆண்டுகளுக்குப்பின், முதல்கட்டமாக 5 ரஃபேல் விமானங்கள் ஆர்பி சீரஸ் ட்ரையல் எண்ணுடன் இன்று ஹரியாணா வருகின்றன. பிரான்ஸின் துறைமுக நகரான போர்டாக்ஸில் உள்ள மெரிக்னாக் விமானப் படைத்தளத்திலிருந்து திங்கள்கிழமை புறப்பட்ட 5 ரஃபேல் போர் விமானங்களும் ஏறக்குறைய 7 ஆயிரம் கி.மீ பயணம் செய்து இந்தியாவை வந்தடைகின்றன.

பல ஆயிரம் கி.மீ பறந்து வந்த 5 ரஃபேல் போர் விமானங்கள் ஐக்கிய அரபு அமீரத்கத்தின் அல் தார்ஃபா விமானப்படைத்தளத்துக்கு வந்து சேர்ந்தன. காலநிலையை கேட்டறிந்தபின், அங்கிருந்து இன்று காலை 11 மணி அளவில் புறப்பட்டு இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு ஹரியாணாவின் அம்பாலா விமானப்படைத் தளத்துக்கு ரஃபேல் விமானங்கள் வந்து சேரும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஃபேல் விமானங்களை முறைப்படி விமானப்படைத் தளத்தில் சேர்க்கும் நிகழ்ச்சி ஆகஸ்ட் மாதம் நடுப்பகுதியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் ராணுவத்தின் பல்வேறு உயர் அதிகாரிகள் முன்னிலையில் நடக்கும் என விமானப்படை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அம்பாலா விமானப்படைத் தளத்தில் ரஃபேல் போர் விமானங்கள் தரையிறங்குவதையடுத்து, அந்த விமானப்படைத் தளத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் இன்று 144 தடை உத்தரவை மாவட்ட போலீஸார் பிறப்பித்துள்ளனர்.

இதுகுறித்து அம்பாலா போலீஸ் டிஎஸ்பி முனிஷ் செகல் கூறுகையில் “ ரஃபேல் போர் விமானங்கள் இன்று தரையிறங்குவதையடுத்து, விமானப்படைத் தளத்தைச் சுற்றி அமைந்துள்ள, துல்கோட், பல்தேவ் நகர், கர்நாலா, பன்ஜோகாரா ஆகிய கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மக்கள் வீடுகளின் மாடியிலிருந்து ரஃபேல் போர் விமானங்களை புகைப்படம் எடுக்கவும், விமானப்படைத் தளத்தை புகைப்படம் எடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. யாரும் எந்த ட்ரோன்களையும் பறக்கவிட தடை விதிக்கப்பட்டுள்ளது. புகைப்படம் எடுப்பவர்கள், ட்ரோன்களை பறக்கவிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கைவிடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

கிழக்கு லடாக் எல்லையில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் ரஃபேல் போர் விமானங்களை நிறுத்த இந்தியா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2-ம் கட்டமாக வரும் விமானங்கள் மேற்கு வங்கம் ஹசிமரா தளத்திலும் நிறுத்தப்படும். மொத்தம் 36 விமானங்களில் 6 விமானங்கள் பயிற்சி விமானங்கள்.

இரட்டை இருக்கை கொண்டவை, ஒரு இருக்கை கொண்ட போர் விமானம். இந்த இரு படைத்தளத்திலும் ரஃபேல் விமானங்களை நிறுத்தவும், பராமரிக்கவும் ரூ.400 கோடிக்கு உள்கட்டமைப்பு வசதிகளை விமானப் படை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x