இந்திய நிதியுதவியில் கட்டப்பட்ட மொரீசியஸ் உச்ச நீதிமன்ற கட்டடம்: இருநாட்டு பிரதமர்கள் நாளை கூட்டாக திறப்பு

மொரீசியஸ் பிரதமர் பிரவீன் ஜெகன்னாத், பிரதமர் நரேந்திர மோடி- கோப்புப் படம்
மொரீசியஸ் பிரதமர் பிரவீன் ஜெகன்னாத், பிரதமர் நரேந்திர மோடி- கோப்புப் படம்
Updated on
1 min read

மொரீசியஸ் உச்சநீதிமன்றத்தின் புதிய கட்டடத்தை, பிரதமர் நரேந்திர மோடியும், மொரீசியஸ் பிரதமர் பிரவீன் ஜெகன்னாத்தும், நாளை கூட்டாகத் திறந்து வைக்க உள்ளனர்.

மொரீசியஸ் நீதித்துறையின் உயர்மட்ட உறுப்பினர்கள் மற்றும் இரு நாட்டுப் பிரதிநிதிகள் முன்னிலையில், காணொலிக் காட்சி வாயிலாக இந்த திறப்பு விழா நடைபெற உள்ளது.

இந்திய அரசின் நிதியுதவியுடன் கட்டப்பட்டுள்ள இந்தக் கட்டடம், அந்நாட்டின் தலைநகரமான போர்ட் லூயி நகரில் இந்திய உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட முதலாவது கட்டமைப்புத் திட்டம் ஆகும்.

2016-ஆம் ஆண்டு, இந்திய அரசு 353 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பீட்டில் வழங்கிய ‘சிறப்புப் பொருளாதாரத் தொகுப்பு’ மூலம் மேற்கொள்ளப்படும் ஐந்து திட்டங்களில் ஒன்றாக, புதிய உச்சநீதிமன்றக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இந்தத் திட்டம், நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள், மதிப்பீட்டைவிட குறைவான செலவில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சுமார் 4,700-க்கும் மேற்பட்ட சதுரமீட்டர் பரப்பிலான நிலத்தில், 10தளங்களுடன், சுமார் 25,000 சதுர மீட்டர் பரப்பில் இந்தக் கட்டடம் அமைந்துள்ளது. அதிநவீன வடிவமைப்பில், வெளிப்புற வெப்பம் மற்றும் ஒலி ஊடுருவாமல், எரிசக்தி சிக்கனம் உள்ளிட்ட பசுமை அம்சங்களுடன் இந்தக் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய கட்டடத்தில், மொரீசியஸ் உச்சநீதிமன்றத்தின் அனைத்துப் பிரிவுகள் மற்றும் அலுவலகங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் அமைவதால், உச்சநீதிமன்றத்தின் செயல்பாடு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறப்புத் தொகுப்புத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட மொரீசியஸின் மெட்ரோ எக்ஸ்பிரஸ் திட்டத்தின் முதற் கட்டத்தையும், புதிய காது, மூக்கு, தொண்டை (E.N.T.) மருத்துவமனையையும் 2019-ஆம் ஆண்டு, பிரதமர் நரேந்திர மோடியும், மொரீசியஸ் பிரதமரும், கூட்டாகத் தொடங்கி வைத்தனர். மெட்ரோ எக்ஸ்பிரஸ் திட்டத்தின் முதற்கட்டத்தில், 12 கிலோமீட்டர் தூரத்திற்கான கட்டுமானப் பணிகள், கடந்த ஆண்டு செப்டம்பரில் முடிக்கப்பட்டு, 14 கி.மீ. தொலைவுக்கான இரண்டாம் கட்ட மெட்ரோ லைன் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இ.என்.டி. (E.N.T.) திட்டத்தின் கீழ், மொரீசியஸில் நாட்டில் 100 படுக்கை வசதிகளுடன் கூடிய அதிநவீன இ.என்.டி. மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.

மொரீசியஸ் நாட்டில், இந்திய உதவியுடன் உயர் தரத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்தக் கட்டமைப்புத் திட்டங்கள், மொரீசியஸ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் இந்திய நிறுவனங்களுக்கு மாபெரும் வாய்ப்பை உருவாக்கும். புதிய உச்சநீதிமன்றக் கட்டடம், நகர மையத்தின் முக்கிய அடையாளமாகத் திகழ்வதுடன், இரு நாடுகளுக்கு இடையேயான நெருங்கிய இருதரப்பு ஒத்துழைப்பை பிரதிபலிப்பதாகவும் இருக்கும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in