மோடியின் ஓராண்டு வெளிநாட்டுப் பயணச் செலவு ரூ.37 கோடி

மோடியின் ஓராண்டு வெளிநாட்டுப் பயணச் செலவு ரூ.37 கோடி
Updated on
1 min read

பிரதமராக பதவியேற்ற பிறகு மோடி மேற்கொண்ட முதல் ஆண்டு வெளிநாட்டு பயணங்களின் செலவு ரூ.37 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரப்பட்டதன் அடிப்படையில், இந்தத் தகவலை மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணம் மற்றும் அதற்காக செலவிடப்பட்ட தொகை குறித்து ஆர்.டி.ஐ. மூலம் ஓய்வுபெற்ற கமாண்டோ லோகேஷ் பத்ரா என்பவர் விவரம் கோரியிருந்தார்.

இதற்கு மத்திய அரசு அளித்திருக்கும் பதிலில், 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை 20 நாடுகளுக்கு மோடி பயணம் சென்றுள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், கடந்த ஓராண்டில் ஜப்பான், இலங்கை, பிரான்ஸ் மற்றும் தென்கொரியா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை.

பிரதமர் மோடியின் முதல் ஆண்டு வெளிநாட்டுப் பயணத்துக்கு ரூ.37 கோடி செலவிடப்பட்டுள்ளது. இவற்றில் அதிகபட்சமாக ஆஸ்திரேலியா பயணத்துக்கு ரூ.8.91 கோடியும், மிக குறைந்தபட்சமாக பூடான் பயணத்துக்கு ரூ.41.33 லட்சமும் செலவானதாக அந்த விவரம் தெரிவித்தது. ஆகவே, பிரதமர் மோடி பயணம் மேற்கொண்ட 16 நாடுகளின் விவரம் மட்டும் அளிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரோலியா - ரூ.8.91 கோடி, அமெரிக்கா - ரூ.6.13 கோடி, ஜெர்மனி - ரூ.2.92 கோடி, ஃபிஜி - ரூ.2.59 கோடி, சீனா - ரூ.2.34 கோடி, செப்டம்பரில் நியூயார்க் சென்றபோது மோடி ஹோட்டலில் தங்குவதற்கென ரூ.9.16 லட்சமும், அவருடன் சென்ற பிரதிநிதிகள் குழுவினர் தங்குவதற்கு ரூ.11.51 லட்சமும் செலவிடப்பட்டுள்ளது. அதேபோல, ஜெர்மனி பயணத்தின்போது ஹோட்டலில் தங்குவதற்கு ரூ.3 லட்சம் செலவிடப்பட்டுள்ளது.

இவற்றைத் தவிர மோடியின் பயணத்தை ஒளிபரப்பு செய்ய ரூ.3 லட்சம் பிரச்சார் பாரதி மூலமும், உள்ளூர் வாகன செலவுகளுக்கு ரூ.39 லட்சம் எஸ்.பி.ஜி. என்ற நிறுவனத்தின் மூலமும் செலவிடப்பட்டுள்ளது.

பதவியேற்ற முதல் ஆண்டில் பிரதமர் மோடி 53 நாட்கள் 17 நாடுகளுக்கு சென்று வந்துள்ளார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் முதல் 365 நாட்களில் 47 நாட்கள் 12 நாடுகளுக்கு சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in