

ஆக்ரா அருகே இடுகாட்டில் சிதையிலிருந்த தலித் பெண் உடல் அங்கிருந்து அகற்றப்பட்டது, காரணம் அந்த இடுகாடு உயர்சாதிப் பிரிவினருக்கானது, இதைக் கண்டித்து பகுஜன் தலைவர் மாயாவதி விசாரணை தேவை என்று உத்தரப் பிரதேச அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “உ.பி.யில் ஆக்ரா அருகே தலித் பெண்ணின் உடலை சிதையிலிருந்தே அகற்றி, அங்கு அவரை எரிக்கக் கூடாது என்று அடாவடியாக நடந்து கொண்டுள்ளனர்.
இந்த வெட்கங்கெட்ட செயல் கண்டிக்கத்தக்கது.
இப்படிப்பட்ட சாதிவெறி பிடித்த செயல் குறித்து உ.பி. அரசு உயர்மட்ட விசாரணை மேற்கொள்ள வேண்டும். குற்றவாளிகளைப் பிடித்து தகுந்த தண்டனை அளித்தால் இனி இது போன்று நடக்காது. இதுதான் பகுஜன் சமாஜ் கோரிக்கை” என்று தெரிவித்துள்ளார்.
அதே போல் கரோனாவினால் டெல்லியில் மரணமடைந்த மத்தியப் பிரதேச தலித் பிரிவு மருத்துவர் குடும்பத்துக்கு தகுந்த நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
”டெல்லி அரசு தன் சாதித்தனமான மனநிலையை கைவிட்டு தன் படிப்புக்காக கடன் பெற்ற அந்த மருத்துவர் குடும்பத்துக்கு உதவ வேண்டும்” என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.