உலகப் புலிகள் எண்ணிக்கையில் இந்தியாவில் மட்டும் 70%

உலகப் புலிகள் எண்ணிக்கையில் இந்தியாவில் மட்டும் 70%
Updated on
1 min read

உலகப் புலிகள் எண்ணிக்கையில், தற்போது இந்தியாவில் சுமார் 70 சதவீதம் உள்ளது.

புலிகள் வசிக்கும் நாடுகளின் தலைவர்கள், ரஷ்யாவில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் 2010-ல் ஒன்று கூடி, 2022 ஆம் ஆண்டிற்குள் உலகில் உள்ள புலிகளின் எண்ணிக்கையை இரண்டு மடங்காக பெருக்குவது என்ற பிரகடனத்தில் கையெழுத்திட்டனர்.

இது புலிகள் பாதுகாப்புக்கான செயின்ட் பீட்டர்ஸ்பர்க் பிரகடனம் என்று அழைக்கப்படுகிறது. அதே கூட்டத்தில், ஆண்டுதோறும் ஜூலை 29-ந் தேதியை உலகப் புலிகள் தினமாகக் கொண்டாடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

மத்திய அரசு, நமது நாட்டில் உள்ள புலிகள் எண்ணிக்கையை கேமரா மூலம் கண்காணித்து கணக்கெடுக்கிறது. உலகிலேயே மிகப் பெரிய அளவில் கேமரா மூலம் புலிகளைக் கண்காணித்து கணக்கெடுப்பதில் இந்தியா கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளது. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், இந்த சாதனையை நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சி, இன்று புதுடெல்லியில் உள்ள தேசிய ஊடக மையத்தில் நடைபெற்றது. நாடுமுழுவதுமிருந்து சுமார் 500 பங்கேற்பாளர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கலந்து கொண்டு கூறியதாவது:

உலகப் புலிகள் எண்ணிக்கையில், தற்போது இந்தியாவில் சுமார் 70 சதவீதம் உள்ளது. இது நமது நாட்டிற்கு பெருமை அளிக்கிறது. இந்தியாவில் மொத்தம் 30 ஆயிரம் யானைகள் உள்ளன. 3 ஆயிரம் காண்டாமிருகங்கள் உள்ளன. 500க்கும் அதிகமான சிங்கங்கள் உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் புதிய இணையதளம் ஒன்றை தொடங்கி வைத்தார். தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையகத்தின் பத்திரிகை ஒன்றையும் வெளியிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in