

கர்நாடகாவில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது. பெங்களூருவில் மட்டும் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை நெருங்குகிறது.
இதுகுறித்து பெங்களூரு மாநகராட்சி ஆணையர் மஞ்சுநாத் பிரசாத் கூறியதாவது:
பெங்களூருவில் கடந்த 14 நாட்களில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்தில் இருந்து 28 ஆயிரமாக அதிகரித்துள்ளது. கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நோயாளிகளில் 3,338 பேரை கண்டறிய முடியவில்லை. பரிசோதனையின் போது அவர்கள் தவறான முகவரி, தொலைபேசி எண் கொடுத்ததால் கண்டறிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.அவர்களை தேடும் பணி தீவிரமாக நடக்கிறது.
கரோனா பரிசோதனை செய்தவர்கள், தங்களுக்கு தொற்று இருப்பது தெரிந்ததும் வீட்டை விட்டு வெளியே சென்று விடுகின்றனர். ஒரு சிலர் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று விடுகின்றனர். இதனால் கரோனா நோயாளிகளை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தொற்று உறுதி செய்யப்பட்டவர்களை கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்துவதே எங்களுடைய நோக்கமாக உள்ளது. பின்னர் அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை உதவிகளையும் வழங்க தயாராக இருக்கிறோம். கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களை கண்டறிவதில் சிக்கல் ஏற்படுவதால், இனி பரிசோதனை மேற்கொள்ள அரசு அங்கீகரித்த அடையாள அட்டைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மஞ்சுநாத் பிரசாத் தெரிவித்தார்.