

முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி முதலான தலைவர்களின் தபால்தலைகள் அச்சிடப்படுவதை நிறுத்துவது தொடர்பான முடிவு, தேச அளவிலான அரசியலில் பெரும் சர்ச்சையாகக் கிளம்பியிருக்கிறது.
சர்ச்சையும்... சவாலும்..!
கடந்த 2008-ம் ஆண்டு நவீன இந்தியாவின் சிற்பிகள் என்ற தலைப்பில் ஜவஹர்லால் நேரு, மகாத்மா காந்தி, அம்பேத்கர், சத்யஜித் ரே, ஹோமி பாபா, ஜே.ஆர்.டி. டாட்டா, இந்திரா காந்தி, ராஜீவ், அன்னை தெரசா உள்ளிடோரின் படங்கள் கொண்ட சிறப்பு தபால்தலைகளை மத்திய அஞ்சல்துறை வெளியிட்டது. இவற்றிலிருந்து முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தியின் படங்கள் கொண்ட தபால்தலைகளை மத்திய அரசு நிறுத்தம் செயய முடிவெடுத்துள்ளது.
அதற்கு பதிலாக நவீன இந்தியாவின் சிற்பிகள் என்ற தலைப்பில் தீனதயாள் உபாத்யாய, ஷியாம் பிரசாத் முகர்ஜி, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், சியாமா பிரசாத் முகர்ஜி, சர்தார் வல்லபாய் படேல், வீர சிவாஜி, மவுலானா ஆசாத், ஜெயப் பிரகாஷ் நாராயணன் உள்ளிட்டோர் படங்கள் கொண்ட தபால்தலைகளை வெளியிடவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி உருவப்படங்களை அச்சிட்ட தபால்தலைகளை இனி தயார் செய்யப்போவதில்லை என்று பாஜக அறிவிப்பு அக்கட்சியின் ஏனைய அறிவிப்புகளைப் போல் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. காங்கிரஸ் சாடல்களை சற்றும் பொருட்படுத்தாத பாஜக இந்த முடிவில் இருந்து பின்வாங்குவதற்கே வாய்ப்பில்லை எனக் கூறுகிறது.
இது குறித்து செய்தியாளர்களிடம் கூறிய மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், "தபால்தலைகள் ஒரு குறிப்பிட்ட குடும்பத்தை கவுரவிப்பதற்காக மட்டுமல்ல, இந்தியாவைச் செதுக்கி சீராக்கும் அனைவரையும் கவுரவிப்பதற்கானது. இந்த தேசத்துக்காக தொண்டாற்றிய அனைவருக்கும் அரசு உரிய மரியாதை வழங்கிவருகிறது. இப்போது எடுக்கப்பட்டுள்ள இம்முடிவு தபால்தலை ஆலோசனைக் குழு பரிந்துரையின்படி எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.
பாஜகவின் இம்முடிவுக்கு கடும் சவால் விடுக்கும் காங்கிரஸ் கட்சி, 'இத்தகைய முடிவு எடுத்ததற்கு மோடி அரசு மன்னிப்பு கேட்க வேண்டும். இது குறுகிய மனப்பான்மையின் விளைவு' எனக் கூறியுள்ளது.
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஆனந்த் சர்மா கூறும்போது, "தேசத்துக்காக உயிர்நீத்த தலைவர்கள் மீது மோடி அரசு கொண்டுள்ள பார்வையை வன்மையாகக் கண்டிக்கிறோம். இது வரலாற்றை அவமதிப்பதாகும்" என்றார்.
கவனிக்கப்படும் கட்ஜு கருத்து
இதனிடையே, பதவிவெறி பிடித்த இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி போன்ற தலைவர்களின் தபால்தலைகள் நிறுத்தம் செய்யப்படுவதில் எந்தத் தவறும் இல்லை என்று உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு தெரிவித்துள்ளார். இது இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.
இது குறித்து உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேயே கட்ஜு தனது வலைப்பக்கத்தில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், "முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பதவிவெறி பிடித்தவர். அதற்கு 1975 சம்பவம் சான்று. ஊழல் வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றம் விதித்த தீர்ப்பை மூடி மறைக்க இல்லாத ஓர் அவசர நிலையை ஏற்படுத்தியவர் அவர்.
இந்திராவுக்கு சற்றும் சளைக்காதவர் ராஜீவ். எந்த ஒரு காரணமும் இன்றி இந்திய ராணுவத்தை இலங்கைக்கு அனுப்பி மிகப் பெரிய அளவில் மக்கள் கொல்லப்பட காரணமாக அவர் இருந்தார். அதில் நமது வீரர்கள் பலரும் கொல்லப்பட்டது வேதனை அளிக்கும் ஒன்று. இவர்கள் இருவருமே பதவிக்காக எதையும் செய்ய துணிந்தவர்கள்" என்று கட்ஜு குறிப்பிட்டுள்ளார்.
தமிழக தலைவர்கள் காட்டம்
இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி முதலான தலைவர்களின் உருவப்படம் பொறித்த தபால்தலைகள் திரும்பப் பெறப்படும் என்ற முடிவை பாஜக அரசு திரும்பப் பெற வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
"மன்னர் மானியத்தை ஒழித்து வங்கிகளை தேசிய மயமாக்கி, வங்கிகள் மூலம் சாதாரண மக்களும் பயன்பெரும் வகையில் கொள்கைகளை வகுத்தவர் இந்திரா காந்தி. பஞ்சாயத்து ராஜ் சட்டம் மூலம் பெண்களுக்கு உள்ளாட்சியில் இடஒதுக்கீட்டை வழங்கியவர், கணினி - தொழில்நுட்பத்தில் இந்தியாவை உலக அரங்கில் மேம்படுத்தியவர் ராஜீவ் காந்தி. இத்தகைய தலைவர்களின் உருவப்படம் பொறித்த தபால்தலைகளை திரும்பப் பெறுவது ஏற்கத்தக்கது அல்ல. இதை மக்களும் ஏற்க மாட்டார்கள்" என்கிறார் ஜி.கே.வாசன்.
குஷ்பு ஆவேசம்
தபால்தலைகள் விவகாரத்தில் ஆவேசமாக கருத்து தெரிவித்த காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு, "காங்கிரஸ் கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி தபால்தலைகளை அச்சிடுவதில்லை என்ற முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது.
காங்கிரஸ் ஆட்சி காலத்தில், பாஜக தலைவர்கள் உருவப்படம் அச்சிடப்பட்ட தபால்தலைக்கோ அல்லது வேறு எந்த ஒரு தலைவரின் தபால்தலைக்கோ தடை விதிக்கப்படவில்லை. காங்கிரஸ் கட்சி எப்போதுமே தேசத் தொண்டாற்றியவர்களுக்கு உரிய மரியாதை அளித்துள்ளது" என்றார் குஷ்பு.