Published : 27 Jul 2020 09:21 PM
Last Updated : 27 Jul 2020 09:21 PM

இந்தியாவிலேயே கேரளாவில்தான் தனியார் மருத்துவமனையில் மிகக் குறைந்த கரோனா சிகிச்சைக் கட்டணம்: முதல்வர் பினராயி விஜயன்

இந்தியாவிலேயே கேரளாவில்தான் தனியார் மருத்துவமனையில் மிகக் குறைந்த கட்டணம் வசூலிக்கப்படுவதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கேரள முதல்வர் பினராயி விஜயன் திருவனந்தபுரத்தில் திங்கட்கிழமை நிருபர்களிடம் கூறியது:

’’கேரளாவில் இன்று 702 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நோய் பாதித்து சிகிச்சையில் இருந்த 745 பேர் இன்று குணமடைந்துள்ளனர். இதுவரை கேரளாவில் 19,727 பேருக்கு நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 10,049 பேர் நோயிலிருந்து குணமடைந்து தங்களது வீடுகளுக்குச் சென்றுள்ளனர்.

தற்போது 9609 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததன் மூலம் 483 பேருக்கு நோய் பரவியுள்ளது. இதில் 35 பேருக்கு எப்படி, எங்கிருந்து நோய் பரவியது என தெரியவில்லை. இன்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் 75 பேர் வெளிநாடுகளில் இருந்தும், 91 பேர் வெளி மாநிலங்களில் இருந்தும் வந்தவர்கள் ஆவர். இன்று 2 பேர் மரணமடைந்துள்ளனர். கோழிக்கோட்டைச் சேர்ந்த 61 வயதான முகம்மது என்பவரும், கோட்டயம் மாவட்டத்தைச் சேர்ந்த 87 வயதான அவுசேப் ஜார்ஜ் என்பவரும் மரணமடைந்தனர்.

இன்று திருவனந்தபுரம் மாவட்டத்தில்தான் மிக அதிகமாக 161 பேருக்கு நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இன்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் 161 பேர் திருவனந்தபுரம் மாவட்டத்தையும், 86 பேர் மலப்புரம் மாவட்டத்தையும், 70 பேர் இடுக்கி மாவட்டத்தையும், 68 பேர் கோழிக்கோடு மாவட்டத்தையும், 59 பேர் கோட்டயம் மாவட்டத்தையும், 41 பேர் பாலக்காடு மாவட்டத்தையும், 40 பேர் திருச்சூர் மாவட்டத்தையும், தலா 38 பேர் கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களையும், 30 பேர் ஆலப்புழா மாவட்டத்தையும், 22 பேர் கொல்லம் மாவட்டத்தையும், தலா 17 பேர் பத்தனம்திட்டா மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்களையும், 15 பேர் எர்ணாகுளம் மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர்.

இன்று சுகாதாரத் துறையைச் சேர்ந்த 43 பேருக்கு நோய் பரவி உள்ளது. இதில் 23 பேர் கண்ணூர் மாவட்டத்தையும், 13 பேர் திருவனந்தபுரம் மாவட்டத்தையும், 3 பேர் கோழிக்கோடு மாவட்டத்தையும், தலா ஒருவர் ஆலப்புழா, பாலக்காடு, மலப்புரம் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களையும் சேர்ந்தவர்கள் ஆவர். கேரளாவின் பல்வேறு பகுதிகளில் 1,55,148 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் 1,45,751 பேர் வீடுகளிலும், 9,397 பேர் பல்வேறு மருத்துவமனைகளிலும் உள்ளனர். இன்று நோய் அறிகுறிகளுடன் 1,237 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 18, 417 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இதுவரை 3,54,480 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இதில் 3,842 பேரின் பரிசோதனை முடிவுகள் இன்னும் வர உள்ளன. இது தவிர சுகாதாரத் துறையினர், வெளிமாநிலத் தொழிலாளர்கள் மற்றும் சமூக நெருக்கமுள்ள 1,14,832 பேரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் 1,11,105 பேருக்கு நோய் இல்லை என்று தெரியவந்துள்ளது. தற்போது கேரளாவில் 495 நோய்த் தீவிரமுள்ள பகுதிகள் உள்ளன.

கேரளாவில் தற்போது 101 கரோனா முதல் நிலை சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் 12,801 படுக்கைகள் உள்ளன. தற்போது இந்த மருத்துவமனைகளில் 45 சதவீத நோயாளிகள் உள்ளனர். இரண்டாவது கட்டத்தில் 201 முதல் நிலை மருத்துவமனைகள் அமைக்கப்படும். இங்கு 30,598 படுக்கைகள் அமைக்கப்படும். மூன்றாவது கட்டத்தில் 36,400 படுக்கைகள் கொண்ட 480 முதல்நிலை மருத்துவமனைகள் தொடங்கப்படும்.

கேரளாவில் நோய்த் தீவிரம் உள்ள பகுதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இப்பகுதிகளில் தினமும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. கேரளாவில் நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்தப்பட்டது. சுகாதாரத் துறையினர், பத்திரிகை அதிபர்கள் உள்படப் பல துறைத் தலைவர்களுடன் நடந்த ஆலோசனையில் தற்போதைய சூழ்நிலையில் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டாம் என்றும், நோய்த் தீவிரம் உள்ள பகுதிகளில் மட்டும் கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

சமூகத்திற்கு முன்மாதிரியாக இருக்க வேண்டியவர்களே நோய் பரவக் காரணமாக இருப்பது வேதனை அளிக்கிறது. இத்தகைய செயலில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கரோனா தடுப்பு நடவடிக்கைகள் சில நாட்களிலோ, சில வாரங்களிலோ அல்லது சில மாதங்களிலோ முடிவடைய வாய்ப்பில்லை. எனவே இதற்காக நீண்டகால தடுப்பு நடவடிக்கைகள் குறித்த திட்டத்தை மேற்கொள்ள வேண்டும்.

திருவனந்தபுரம் மாவட்டத்தில் மிக மோசமான நிலை தொடர்கிறது. இங்கு சில பகுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இங்கு ஊரடங்கு சட்ட நிபந்தனைகளைத் தளர்த்தலாமா என்பது குறித்து ஆலோசிப்பதற்காகத் தலைமைச் செயலாளர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு உள்ளது. திருவனந்தபுரம் மாவட்டத்தில் தற்போது 2,723 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதில் 11 பேர் அவசர சிகிச்சைப் பிரிவிலும், ஒருவர் வெண்டிலேட்டரிலும் உள்ளனர். நோய் பாதிக்கப்பட்ட வயதானவர்கள் கரோனா நல மையத்திற்கு மாற்றப்படுவார்கள்.

தனிமையில் இருப்பவர்களின் வீடுகளில் பலருக்கு நோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த வீடுகளில் இருப்பவர்கள் உடனடியாக முதல் நிலை சிகிச்சை மையத்திற்கு மாற்றப்படுவார்கள். நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில் கேரளா மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக விளங்குகிறது. நமது மாநிலத்தில் நோயாளிகளுக்கு அதிநவீன சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதே இதற்கு காரணமாகும்.

எனவே மற்ற மாநிலங்களும் கரோனா நோய் சிகிச்சையில் கேரளாவைப் பின்பற்றி வருகின்றன. இங்கு அளிக்கப்படும் சிறப்பான சிகிச்சை காரணமாகத்தான் மரண எண்ணிக்கை குறைந்துள்ளது. ஜூலை 26-ம் தேதி வரை கேரளாவில் 61 பேர் மரணமடைந்துள்ளனர். இதில் 40 பேர் ஆண்கள், 21 பேர் பெண்கள் ஆவர். இதில் திருவனந்தபுரம் மாவட்டத்தில்தான் மிக அதிகமாக 11 பேர் மரணமடைந்துள்ளனர். இறந்தவர்களில் 20 பேர் 60 முதல் 70 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர். 18 பேர் 70 முதல் 80 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர். 80 வயதுக்கு மேல் 3 பேர் உள்ளனர். 9 பேர் 50 வயதுக்கும் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர். 10 வயதுக்குக் கீழ் உள்ள ஒருவர் மரணமடைந்துள்ளார்.

இறந்தவர்களில் 39 பேருக்குக் கரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததன் மூலம் நோய் பரவியது. 22 பேர் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தார்கள் ஆவர். கேரளாவில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இலவசமாக சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கரோனா முதல் நிலை சிகிச்சை மையங்களில் இலவச சிகிச்சையுடன் இலவசமாக உணவும் வழங்கப்படுகிறது.

கரோனா சிகிச்சையில் கேரளாவில் தனியார் மருத்துவமனைகள் அரசுடன் சிறப்பான முறையில் ஒத்துழைக்கின்றன. தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி பொது வார்டுகளில் 2,300 ரூபாயும், அவசர சிகிச்சைப் பிரிவில் 6,500 ரூபாயும் வெண்டிலேட்டர் அவசர சிகிச்சைப் பிரிவில் 11,500 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்தியாவிலேயே கேரளாவில்தான் தனியார் மருத்துவமனையில் மிகக் குறைந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும். மற்ற மாநிலங்களில் கட்டணம் மிக அதிகமாகும்’’.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x