Published : 27 Jul 2020 07:58 PM
Last Updated : 27 Jul 2020 07:58 PM

ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து புதிய வெட்டுக்கிளிக் கூட்டம் படையெடுப்பு: வரும் வாரங்களில் நீடிக்கும்: மத்திய அரசு எச்சரிக்கை 

சோமாலியாவில் இருந்து புதிய வெட்டுக்கிளிக் கூட்டங்கள், கிழக்கு முகமாக வடக்கு நோக்கிப் பயணிப்பதாகவும் இதிலிருந்து சில பகுதி கூட்டங்கள் இந்த மாத இறுதிக்காலத்தில் இந்திய பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்குள் நுழைய வாய்ப்பு இருப்பதாகவும் மத்திய அரசு எச்சரித்துள்ளது.

ராஜஸ்தானில் உள்ள ஜெய்சால்மர், பார்மர், ஜோத்பூர், பிகானேர், சுறு, நகோர், ஜுன்ஜுனு, ஹனுமான் கர், ஸ்ரீ கங்காநகர் ஆகிய ஒன்பது மாவட்டங்களில், 36 இடங்களிலும், குஜராத்தில் கட்ச் மாவட்டத்தில் ஒரு இடத்திலும் வெட்டுக்கிளி வட்ட அலுவலகங்கள் (எல்சிஓக்கள்) மூலமாக வெட்டுக்கிளிகள் /தத்துக்கிளிகள் கூட்டத்திற்கு எதிரான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் 26- 27 ஜூலை 2020 இரவில் எடுக்கப்பட்டன.

இன்னும் முழுமையாக வளர்ச்சி பெறாத இளஞ்சிவப்பு வண்ண வெட்டுக்கிளிகளின் கூட்டங்கள், முழுமையாக வளர்ச்சி பெற்ற மஞ்சள்நிற வெட்டுக்கிளிகள்/ தத்துக்கிளிகள் இன்று 27.7.2020 அன்று ராஜஸ்தானில் ஜெய்சால்மர், பார்மர், ஜோத்பூர், பிகானேர், சுறு, நகோர், ஸ்ரீகங்காநகர் ஜுன்ஜுனு, ஹனுமான்கர், ஆகிய இடங்களிலும், குஜராத்தில் கட்ச் மாவட்டத்தில் ஒரு இடத்திலும் கூட்டம் கூட்டமாக காணப்படுகின்றன.

11 ஏப்ரல் 2020 முதல் 26 ஜூலை 2020 வரை ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், குஜராத், உத்தரப்பிரதேசம், ஹரியாணா ஆகிய மாநிலங்களில்,2 லட்சத்து 14 ஆயிரத்து 642 ஹெக்டேர் நிலப்பரப்பில் எல் சி ஓ கள் மூலமாக கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 26 ஜூலை 2020 வரை ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், பஞ்சாப், குஜராத், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, சட்டீஸ்கர், ஹரியாணா, உத்தரகண்ட், பிஹார் ஆகிய மாநிலங்களில் மாநில அரசுகளின் மூலம் 2 லட்சத்து 14 ஆயிரத்து 130 ஹெக்டேர் நிலப்பரப்பில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

குஜராத், உத்திரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், பிஹார், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் கணிசமான அளவில் பயிர் இழப்பு எதுவும் உள்ளதாக அறிக்கை எதுவும் வரவில்லை. ஆனால் ராஜஸ்தானில் சில மாவட்டங்களில், சிறிய அளவிலான பயிர் சேதம் ஏற்பட்டுள்ளதாக அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.

ஹார்ன் ஆஃப் ஆப்பிரிக்கா என்னும் இடத்திலிருந்து புறப்பட்டு பயணிக்கும் இந்த வெட்டுக்கிளிகள் கூட்டங்கூட்டமாக படையெடுப்பது, வரவிருக்கும் வாரங்களிலும் நீடிக்கும் என்று உணவு வேளாண் அமைப்பின் வெட்டுக்கிளிகள் நிலவர அறிக்கை 21.7.2020 சுட்டிக்காட்டுகிறது. சோமாலியாவில் இந்த வெட்டுக்கிளிக் கூட்டங்கள், கிழக்கு முகமாக வடக்கு நோக்கிப் பயணிக்கின்றன. இதிலிருந்து சில பகுதி கூட்டங்கள் இந்துமாக்கடல் வழியாக இந்த மாத இறுதிக்காலத்தில் இந்திய பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்குள் நுழையலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x