

இந்தியாவின் பாதுகாப்பு, இறையாண்மை, ஒருமைப்பாடு ஆகியவற்றைப் பாதுகாக்கும் வகையில் சீன நிறுவனத்தின் மேலும் 47 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மாத இறுதியில் 59 சீனச் செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ள நிலையில், அந்தச் செயலிகளின் குளோனிங் செயலாக இந்த 47 செயலிகள் இருந்ததால் அவை தடை செய்யப்பட்டதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில், கடந்த 15-ம் தேதி இந்திய - சீன ராணுவத்தினர் இடையே நடைபெற்ற மோதலில் 20 இந்திய வீரர்கள் இறந்தனர். இதனால் எல்லையில் போர்ப் பதற்றம் ஏற்பட்டது. எல்லையில் நடந்த தாக்குதலைத் தொடர்ந்து, சீனப் பொருட்களை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்றும் சீன நிறுவனங்களின் செல்போன் செயலிகளை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசுக்குத் தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்தன.
இந்நிலையில் தேசப் பாதுகாப்பு, தனிநபர் அந்தரங்க உரிமை ஆகிய காரணங்களுக்காக சீன நிறுவனங்களின் செல்போன் செயலிகளான டிக்-டாக், ஷேர் இட், யுசி புரவுசர், பைடு மேப், ஹலோ, எம்ஐ கம்யூனிட்டி, கிளப் பேக்டரி, வீ சாட், யுசி நியூஸ் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு மத்திய அரசு கடந்த மாதம் 29-ம் தேதி தடை விதித்தது.
இந்திய இறையாண்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு மற்றும் பொது அமைதிக்குக் கேடு விளைவிக்கும் நடவடிக்கைகளுக்கு இவற்றில் இடம்பெறும் தகவல்கள் பயன்படுத்தப்படுவதாகவும் மத்திய அரசு விளக்கம் தெரிவித்துள்ளது.
இந்தச் சூழலில் சீனாவின் மேலும் 47 செல்போன் செயலிகளுக்கு மத்திய அரசு கடந்த வெள்ளிக்கிழமை தடை விதித்திருப்பதாக தூர்தர்ஷன் தனது ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக சீனாவின் 106 செல்போன் செயலிகளுக்கு இதுவரை மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த 47 செயலிகளுக்கு மத்திய அரசு வெள்ளிக்கிழமையே தடை விதித்துள்ளது. ஆனால், ஊடகங்களுக்கு இன்று காலைதான் கசிந்துள்ளது.
இந்த 47 செயலிகளின் பட்டியல் குறித்து இதுவரை மத்திய அரசு அறிவிக்கவில்லை. ஆனால், டிக்-டாக் லைட், ஹெலோ லைட், ஷேர் இட் லைட், பிகோ லைவ் உள்ளிட்டவை இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், 250 செயலிகளைத் தடை செய்வது குறித்து மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. அதில் பப்ஜி கேம், அலிபாபா உள்ளிட்ட செயலிகளையும் தடை செய்யும் பட்டியலில் இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.