Last Updated : 27 Jul, 2020 02:41 PM

 

Published : 27 Jul 2020 02:41 PM
Last Updated : 27 Jul 2020 02:41 PM

என் அரசியல் வாழ்வு அஸ்தமித்தால்கூட லடாக்கில் சீன அத்துமீறல் இல்லை என்று பொய் சொல்லமாட்டேன்: ராகுல் காந்தி பேட்டி

என்னுடைய அரசியல் வாழ்வு அஸ்தமித்தால்கூட, கிழக்கு லடாக்கில் சீன ராணுவம் இந்தியப் பகுதிக்குள் அத்துமீறி நுழையவில்லை என்று ஒருபோதும் பொய் சொல்லமாட்டேன் என்று காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்த மாதம் 15-ம் தேதி இந்திய-சீன ராணுவத்துக்கு இடையே நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். அப்போது இருந்து மத்திய அரசை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

கிழக்கு லடாக் பகுதியில் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்து ஆக்கிரமித்துவிட்டது. அதை மத்திய அரசு கண்டிக்கவில்லை. பிரதமர் மோடி எல்லையை சீனாவிடம் ஒப்படைத்துவிட்டார் என்று ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்தார். இதற்கு பாஜகவும் பதிலடி கொடுத்தது.

இந்நிலையில் ராகுல் காந்தி இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் 1.20 நிமிடம் வரை ஓடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், ''எல்லையில் சீனா அத்துமீறலில் ஈடுபடவில்லை என்று மத்திய அரசு மறுப்பதுபோல் நான் மறுக்கமாட்டேன், பொய் சொல்ல முடியாது'' என்று தெரிவித்துள்ளார்.

ட்விட்டரில் ராகுல் காந்தி பதிவிட்ட கருத்தில், “இந்திய நிலப்பகுதியை சீனா ஆக்கிரமித்திருக்கிறது. உண்மையை மறைப்பதும், இந்திய நிலப்பகுதியை அவர்கள் கைப்பற்ற அனுமதிப்பதும் தேச விரோதம். மக்களின் கவனத்துக்கு இதைக் கொண்டுவருவதுதான் தேசபக்தி” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த வீடியோவில் ராகுல் காந்தி பேசுகையில், “ஒரு இந்தியனாக என்னுடைய முக்கியத்துவம் என்பது தேசமும், மக்களும்தான். இந்திய எல்லையை சீன ராணுவம் ஆக்கிரமித்துள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது.

என்னை இந்தச் சம்பவம் மிகவும் வேதனைப்படுத்துகிறது. வெளிப்படையாகச் சொல்கிறேன், என் ரத்தத்தைக் கொதிப்படைய வைக்கிறது. எவ்வாறு வேறு நாட்டு ராணுவம் நம் நாட்டுக்குள் நுழைய முடியும்.
இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் ஆக்கிரமித்துள்ளது. செயற்கைக்கோள் புகைப்படங்களைப் பார்த்துவிட்டேன். ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களிடம் பேசிவிட்டேன்.

இந்த தேசத்தின் எல்லைக்குள் சீன ராணுவம் அத்துமீறி நுழையவில்லை என்று என்னை நீங்கள் பொய் கூறச் சொன்னால், நான் பொய் உரைக்கமாட்டேன். அவ்வாறு என்னால் பொய் கூற முடியாது என்று கூறிவிடுவேன். என்னுடைய அரசியல் வாழ்க்கை முழுவதும் நரகமானால்கூட, நான் பொய் சொல்லமாட்டேன்.

நம் நாட்டு எல்லைக்குள் சீன ராணுவம் அத்துமீறவில்லை என்று யார் பொய் சொல்கிறார்களோ. அவர்கள் தேசபக்தர்கள் அல்ல. தேசியவாதிகள் அல்ல. எனக்கு அரசியல் வாழ்க்கையே இல்லையென்றாலும் கவலையில்லை, ஆனால் இந்தியப் எல்லைப் பகுதியைப் பொறுத்தவரை நான் உண்மையைச் சொல்லப் போகிறேன்” என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x