

கர்நாடகாவில் 10 அமைச்சர்களை நீக்கிவிட்டு, 14 புதுமுகங்களுக்கு அமைச்சர் பதவி வழங்க அம்மாநில முதல்வர் சித்தராமையா முடிவு செய்துள்ளார்.
கடந்த 2013-ம் ஆண்டு நடை பெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தது. கடந்த 28 மாதங்களில் சித்தராமையா தலைமையிலான கர்நாடக அமைச்சரவை 2 முறை விரிவாக்கம் செய்யப்பட்டது. சுரங்க முறைகேடு புகார் எழுந்ததை தொடர்ந்து தகவல் தொடர்புத்துறை அமைச்சர் சந்தோஷ் லாட் பதவி பறிக்கப்பட்டது.
கர்நாடக அமைச்சரவையில் காலியாக இருக்கும் 4 இடங் களை நிரப்பக்கோரி மூத்த எம்எல்ஏக்கள் சிலர் பல மாதங்களாக கோரி வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற பெங் களூரு மாநகராட்சி தேர்தலில் காங்கிரஸுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததால், சித்தராமை யாவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து தனக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள எம்எல்ஏக்களை சமாதானம் செய்ய அமைச்சரவையை விரிவாக்க சித்தராமையா முடிவெடுத்துள் ளார். இதன்படி சரியாக செயல்படாமல் இருக்கும் அமைச்சர்களை நீக்கிவிட்டு, புது முகங்களுக்கு வாய்ப்பு வழங்க முடிவெடுத்துள்ளார். அதன்படி அம்பரீஷ் (வீட்டுவசதி), சீனிவாச பிரசாத் (வருவாய்), சிவராஜ் தங்கடகி (சிறு நீர்ப்பாசனம்), கிம்மனே ரத்னாகர் (கல்வி) உட்பட 10 அமைச்சர்கள் நீக்கப்படுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் காலியாக இருக்கும் 4 துறைகளுடன் சேர்த்து 14 புது முகங்களுக்கு அமைச் சரவையில் இடமளிக்க முடிவெடுக் கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதன்படி கர்நாடக காங்கிரஸ் தலைவர் ஜி.பரமேஷ்வர், சபாநாயகர் காகோடு திம்மப்பா, எச்.ஒய்.மேட்டி, ஏ.மஞ்சு, எஸ்.எஸ். மல்லிகார்ஜுன் உள்ளிட்டோருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
இதுதொடர்பாக சித்தராமையா கூறும்போது, “அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக காங்கிரஸ் மேலிட தலைவர்களுடன் ஆலோ சனை நடத்துவதற்காக வரும் 24-ம் தேதி டெல்லி செல்கிறேன். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி, கர்நாடக மேலிட பொறு ப்பாளர் திக்விஜய் சிங் ஆகியோரை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தப்படும். அப்போது அமைச்சரவையில் யாருக்கு இடமளிக்கலாம், யாரை நீக்கலாம் என முடிவெடுக்கப்படும். இதைத் தொடர்ந்து அக்டோபர் முதல் வாரத்தில் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும்” என்றார்.